கால்நடை பராமரிப்புக்கு கடனுதவி வழங்க திட்டம்
உடுமலை; கால்நடை வளர்ப்பும் விவசாயத்துடன் இணைந்தது என்பதால், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வழங்கப்படும், 'விவசாய கடன் அட்டை' வழங்கும் திட்டம், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு கடன் பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடை மாடுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் இருந்து சான்று பெறுகின்றனர். இந்த விண்ணப்பங்கள், வங்கிகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு மாட்டுக்கு, 14 ஆயிரம் ரூபாய், 5 மாடுகளுக்கு மேல் வளர்க்கும் விவசாயிகளுக்கு, ஒரு மாட்டுக்கு, 17 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெற, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில், இதுவரை, 80 கடன் விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.முகாம் முடிந்த நிலையிலும் கூட ஆங்காங்கே உள்ள கால்நடை மருந்தகங்களில் விவசாயிகள், விண்ணப்பம் வழங்கியுள்ளனர். இவை பரிசீலிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.பல்லடம், ஊத்துக்குளி மற்றும் பொங்கலுார் வட்டாரங்களில் முகாம் நடத்தப்பட இருக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.