பள்ளிகளில் சேர்க்கை தீவிரம்; வாட்ஸ் ஆ ப்பில் விழிப்புணர்வு
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சேர்க்கைக்கான விழிப்புணர்வு துவங்கியுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தற்போது மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.கடந்தாண்டில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால், தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.நடப்பாண்டில், கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளியில் சேர்க்கைக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. இதனால் துவக்கம், நடுநிலைப்பள்ளிகளில் விடுமுறையில் சேர்க்கைக்கான விழிப்புணர்வுக்கு தீவிரம் காட்டாமல் உள்ளனர். ஆனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு தற்போது முதல் விழிப்புணர்வு துவங்கியுள்ளனர்.சேர்க்கை குறித்து முன்னாள் மாணவர்கள், பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினருக்கு ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.மேலும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கருத்தை பதிவிட்டும் தகவல்களை, ஆசிரியர்கள் ஒருங்கிணைத்து அனுப்பி சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.