பள்ளி மேலாண்மை குழு தீர்மானம்; நடவடிக்கைக்கு கல்வித்துறை உறுதி
உடுமலை : பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும், பள்ளி மேம்பாட்டுக்கான தீர்மானங்கள் மீது, கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.அரசுப்பள்ளிகளில், பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,அரசுப்பள்ளிகளில், இரண்டாண்டுகளுக்கு பின்பு, நடப்பு கல்வியாண்டில் புதிய பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகளில் இக்குழுவின் முதல் கூட்டம் நடக்கிறது.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நடப்பாண்டு முதல் பள்ளி மேலாண்மை குழுவிற்கு, கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதனால், இனி நடக்கும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், பள்ளி மேம்பாட்டு பணிகள், அடிப்படை கட்டமைப்பு பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும், கல்வித்துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.மாவட்ட அளவில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அனைத்துத்துறை அலுவலர்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழுவிற்கான சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.அக்கூட்டத்தில், குழுவின் தீர்மானங்கள் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளுக்கான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என, கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.இதை மையமாகக்கொண்டு, மேலாண்மை குழு உறுப்பினர்களும் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, நுாறு சதவீதம் வருகைப்பதிவு செய்வதற்கு, ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.இதன் வாயிலாக, பள்ளிகளின் முக்கிய தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.