| ADDED : மார் 12, 2024 10:23 PM
உடுமலை:உடுமலை அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க, பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு, பொருட்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கென இரவு காவலர்கள் முன்பு நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை.சில பள்ளிகளில் நிர்வாகத்தினரின் முயற்சியால், தற்காலிகமாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வகுப்பு நேரங்களில் மாணவர்கள் வெளியில் செல்வது, வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைவதை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் வசதிகள் இல்லை.மேலும், பல பள்ளிகளில் குறிப்பாக கிராமப்பகுதி பள்ளிகளில் விடுமுறை நாட்களில் அப்பகுதியில் உள்ளவர்கள் வந்து விளையாடுவது தொடர்ந்து நடக்கிறது.இதனால் பள்ளி வகுப்பறைகளை சேதப்படுத்துவது, மதுபாட்டில்களை வீசிச்செல்வதும் நடக்கிறது. இப்பிரச்னைகளை தடுப்பதற்கு, பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமரா வசதி அவசிய தேவையாக உள்ளது.தற்போது அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்பட உள்ளது. வகுப்பறைகளையும், கற்றல் உபகரணங்கள், தொழில்நுட்ப தளவாடங்களை பாதுகாப்பதுடன் பராமரிப்பதற்கு கண்காணிப்பு கேமரா வசதி பொறுத்துவதற்கு தலைமையாசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'பாதுகாப்பிற்காக மட்டுமின்றி, பள்ளியில் நடக்கும் செயல்பாடுகளை கவனிப்பதற்கும் கேமரா தேவைப்படுகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு, வகுப்பறை செயல்பாடுகள், உட்பட அனைத்து தேவைகளுக்கும் கேமரா பொருத்தப்படுவதால் பள்ளியின் நிலை பாதுகாப்பானதாக மாறும். அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.