உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராட்சத காற்றாடியுடன் வந்த லாரியால் சிக்கல் வளைவில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி

ராட்சத காற்றாடியுடன் வந்த லாரியால் சிக்கல் வளைவில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி

பல்லடம்: பல்லடம் நகரப்பகுதி வழியாக, தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த நேரங்களில், கனரக வாகனங்கள் பல்லடம் நகரப் பகுதி வழியாக அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், சில கனரக வாகனங்கள் விதிமுறை மீறி நகரப் பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.நேற்று பிற்பகல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, காற்றாலை நிறுவனத்துக்கு காற்றாடி ஏற்றிக்கொண்டு வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, என்.ஜி.ஆர்., ரோடு சந்திப்பு அருகே, வளைவில் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டது.தகவல் அறிந்து வந்த பல்லடம் போக்குவரத்து போலீசார், லாரியை விடுவிக்க வேண்டி போராடினர். இருப்பினும், முயற்சி பயனளிக்காத நிலையில், பொக்லைன் வரவழைக்கப்பட்டது.மைய தடுப்பு கற்கள் அகற்றப்பட்டு, லாரி திரும்புவதற்கு இட வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்குள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பல கி.மீ, துாரத்துக்கு அணிவகுத்து நின்றன.தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்ததால், இதனுடன் தொடர்பில் உள்ள பொள்ளாச்சி, அவிநாசி, தாராபுரம், திருப்பூர், கொச்சி உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கின.ஏறத்தாழ, இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடந்த போராட்டத்துக்குப் பின், கன்டெய்னர் லாரி, பல்லடம் - கொச்சி ரோட்டில் நிறுத்தப்பட்டது. இதன் பின்னரே, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.விதிமுறைகளை மீறி, போக்குவரத்து நிறைந்த நேரத்தில், நகரப் பகுதிக்குள் நுழைந்ததற்காக அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து டி.எஸ்.பி.,யுடன் ஆலோசித்து அபராதம் விதிக்கப்படும் என, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி