புதரின் பிடியில் நிழற்குடை; கடைகளில் மக்கள் தஞ்சம்
பல்லடம்: பல்லடம் தாலுகா, கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் பகுதி, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. பயணிகளுக்கு, காமநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப், முக்கிய நிறுத்தமாக உள்ளது.தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாப்பில், ஏற்கனவே உள்ள நிழற்குடை புதரின் பிடியில் சிக்கி பராமரிப்பின்றி காணப்படுகிறது. பஸ்சுக்கு காத்திருக்கும் பொதுமக்கள், ரோட்டோர கடைகளில் தஞ்சமடைகின்றனர். கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க முடியாது. இருக்கும் ஒரே ஒரு நிழற்குடையும் பராமரிப்பின்றி இருப்பதால், வயதானவர்கள், பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.நிழற்குடை இருந்தும் பயன்படுத்த இயலாத நிலையில், பஸ்களும், பஸ் ஸ்டாப்பை தவிர்த்து, காமநாயக்கன்பாளையம் நால் ரோட்டில் நின்று செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாப் முழுமையாக தவிர்க்கப்படுவதால், பயணிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, எண்ணற்ற கிராம மக்கள் வந்து செல்லும் காமநாயக்கன்பாளையம் நால் ரோட்டில், ரோட்டின் இருபுறமும் உள்ள பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.