பசுமை திரும்பியதால் மேய்ச்சலுக்கு வரும் செம்மறியாடுகள்
உடுமலை; உடுமலை பகுதிகளில், பசுமை திரும்பியுள்ளதால், திண்டுக்கல் பகுதிகளிலிருந்து செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு வரப்படுகின்றன.திண்டுக்கல் மாவட்டம், பழநி, நெய்க்காரபட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில், பல ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.உடுமலை பகுதிகளில், கடந்தாண்டு பருவ மழைகள் இயல்பை விட அதிகரித்ததால், பசுமை திரும்பியுள்ளது. இதனால், அப்பகுதிகளிலிருந்து, கால்நடையாக செம்மறி ஆடுகளை, கால்நடையாக உடுமலை பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.இவ்வாறு, 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டுக்கூட்டம் தற்போது. உடுமலை பகுதிகளில் முகாமிட்டுள்ளது.செம்மறி ஆடுகள், அறுவடை முடிந்த வயல்கள் மற்றும் பச்சை உள்ள மேய்ச்சல் நிலங்களில் மேயவிடப்படுவதோடு, இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் பட்டி அமைத்து, தங்கிக்கொள்வர். இவ்வாறு 'கிடை' அமைப்பதால், அங்கு தங்கும் செம்மறி ஆடுகளின் சாணம், சிறுநீர் ஆகியன, இயற்கை உரமாக சேருகிறது.பட்டியில் அடைக்கப்படும் செம்மறியாடுகளின் எண்ணிக்கை மற்றும் கிடை கட்டும் நாட்களை பொறுத்து, செம்மறி ஆடுகளின் உரிமையாளர்களுக்கு, ரூ, ஆயிரம் ரூபாய் வரை 'கிடை' கூலியாக, விவசாயிகளிடமிருந்து கிடைக்கின்றன.தற்போது, உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம், நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், தென்னை மரங்களுக்கு நல்ல உரம் கிடைக்கும் என்பதால், 'கிடை' அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.