ஷிப்ட் முறை: பெற்றோர் எதிர்ப்பு!
திருப்பூர்; 'பள்ளிக்கு அழைத்து வருவது, பள்ளியில் இருந்து கூட்டிச் செல்வதில் சிரமங்கள் ஏற்படும்; குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம்; ஷிப்ட் முறை வேண்டாம்,' என, கருத்துக் கேட்பு கூட்டத்தில், பெற்றோர் தெரிவித்தனர்.திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 1,235 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மொத்தம், 36 பிரிவுகள் உள்ளது. ஆனால், பள்ளியில், 20 வகுப்பறை மட்டுமே இருப்பதால், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை வகுப்பறைக்கு வெளியே, மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தி வந்தனர்.இட பற்றாக்குறையால் பள்ளியின் மொட்டை மாடியில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர் படம் நடத்தினர். இது குறித்து, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து ஆய்வு நடத்தினர். இடப்பற்றாக்குறையை தவிர்க்க, புதிய வகுப்பறை கட்டும் வரை உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவருக்கு ஷிப்ட் முறை நடைமுறைப்படுத்தப்படும்; ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவருக்கு காலையில் ஆங்கிலவழிக் கல்வியும், மதியம் தமிழ்வழிக் கல்வியும் என வகுப்பு நடக்குமென அறிவித்தனர்.இந்நிலையில், பள்ளியின் நேரம் மாற்றம் தொடர்பாக, பெற்றோர் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் மனிஷ்நாரணவரே தலைமை வகித்து பேசுகையில், ''பள்ளிக்கு அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு ஏக்கர் இடம் உள்ளது. உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி அனுமதி பெற்று, நிதி கிடைத்த பின் அவ்விடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டு, பள்ளிக்கு வழங்கப்படும்,'' என்றார். பாதுகாப்பு முக்கியம்
தொடர்ந்து, பள்ளி ஷிப்ட் முறை தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து - பெற்றோர் இடையே கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வீரபாண்டி பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர்.பெற்றோர் பலர் பேசுகையில், 'ஷிப்ட் முறை வேண்டாம். குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம். பள்ளிக்கு கொண்டு வந்து விடுவதும், அழைத்துச் செல்வதும் சிரமம்; எனவே, மாற்று ஏற்பாடு செய்யுங்கள்,' என்றனர்.சி.இ.ஓ., பேசுகையில், ''மாற்று ஏற்பாடு குறித்து கலெக்டரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். இன்று (நாளை) முதல் வழக்கமான நடைமுறையில் பள்ளி செயல்படும்,'' என்றார்.