உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்வளத்துறையில் கள அலுவலர்கள் பற்றாக்குறை; பணியிடங்கள் நிரப்பப்படுமா?

நீர்வளத்துறையில் கள அலுவலர்கள் பற்றாக்குறை; பணியிடங்கள் நிரப்பப்படுமா?

திருப்பூர்; 'தமிழகத்தில் ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்' என, ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசும் ஈடுபட்டு வருகிறது.மாவட்ட வாரியாக, நீர்வளத்துறையில் உதவி பொறியாளர் பணியிடங்களும், களப்பணியாற்றும் வகையில் ஆய்வாளர், பாசன உதவியாளர், 'லஸ்கர்' எனப்படும் கரைகாவலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு, பணியின் போது இறப்பு உள்ளிட்ட பல காரணங்களால், ஏராளமான பணியிடங்கள் காலியாகி வருகின்றன.தற்போது, போட்டி தேர்வு வாயிலாக, 150க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும், அவர்களுக்கு உதவியாக, நீர்நிலை புறம்போக்குகளை அடையாளம் காண்பது, ஆக்கிரமிப்புகளை அகற்ற 'நோட்டீஸ்' வழங்குவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வாளர்கள் கவனிக்கின்றனர்.நீர்நிலையில் உள்ள மதகுகளை திறந்து விடுவது, பலவீனப்பட்டுள்ள கரைகளை கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை பாசன உதவியாளர்கள் மற்றும் கரை காவலர்கள் மேற்கொள்கின்றனர். 'உதவி பொறியாளர் பணியிடங்கள் தேவைக்கேற்ப உள்ள நிலையில், 80 சதவீதம் அளவுக்கு களப்பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், 'நீர்வளத்துறை சார்ந்த பணிகள் பாதிக்கின்றன' என, துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். எனவே, களப்பணியாளர் பணியிடங்களையும் நிரப்புமாறு கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை