மரங்கள் கொலை தொடரலாமா?
திருப்பூர் : திருப்பூர் அருகே மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. இதுபோன்று மரங்களின் 'கொலை' தொடர்வது பசுமை ஆர்வலர்களை வேதனைக் குள்ளாக்கியுள்ளது.திருப்பூர், பட்டம்பாளையம் ஊராட்சியில் குட்டை மற்றும் ரோட்டோரமுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களுக்கு இடையூறாக மரங்கள் இருந்ததால், வெட்டப்பட்டுள்ளன என, கூறப்படுகிறது.இருப்பினும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், கிளைகளை மட்டும் வெட்டுவதை தவிர்த்து, மரங்கள் வெட்டப்பட்டது தவறு என, அப்பகுதி மக்கள் சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதே போன்று, அவிநாசி, ஆட்டையம்பாளையம் சாலையோரமுள்ள அரச மரம், புளியமரம், வாகை மரம் உள்ளிட்ட சில மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதுவும், பசுமை ஆர்வலர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மரங்களின் அருமைபுரிவதில்லை
மரங்கள் புவிக்கு மேலே குடை பிடிக்கின்றன; அவற்றின் வேர்களோ புவிக்குக் கீழே குடை விரிக்கின்றன. தண்ணீர் சேமிப்புக்கு மேல்நிலைத்தொட்டி போன்று, மரங்கள் புவிக்குக் கீழே தொட்டியை அமைக்கின்றன. புவிக்கு கீழ் நீர்ச்சேகரிப்பு, துாய மழைநீரை மண்ணுக்கு வழங்குவதற்கு மரங்கள் துணை புரிகின்றன. மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்களில் மேகங்கள் குளிர்ச்சியடைகின்றன. மரங்களைப் பாதுகாப்பது நம் கடமை; அவற்றை வெட்டிச்சாய்க்க அனுமதிக்கக்கூடாது. மரங்களை கருணையின்றி வெட்டிச்சாய்ப்போர் மீது நடவடிக்கை தேவை.