திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய எஸ்.ஐ.ஆர்., கணக்கீட்டு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும்(பி.எல்.ஓ.), பி.எல்.ஓ.க்களுக்கு உதவியாக கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கல்லுாரி மாணவர்கள் உள்பட தனியாருக்கு, படிவம் ஒன்றுக்கு, 2 ரூபாய் வீதம் கணக்கிட்டு சம்பளம் வழங்கப்பட்டது. தீவிர திருத்த படிவம், வாக்காளரின் சுய விவரம், 2002 தீவிர திருத்த பட்டியலில் இடம்பெற்ற வாக்காளரின் விவரம்; 2002 ல் இடம்பெற்ற வாக்காளரில் உறவினரின் விவரங்களை பூர்த்தி செய்யும்வகையில், மூன்று பிரிவுகளை கொண்டது. வரைவு பட்டியலுக்கு பிறகு, கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிவரும் என்பதால், வாக்காளர்கள் 2002 பட்டியலில் இடம்பெற்ற தங்கள் விவரம் அல்லது உறவினர் விவரங்களை தேடி கண்டுபிடித்து, படிவத்தில் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். பி.எல்.ஓ.,க்களுக்கு உதவுவதற்காக சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டவர்களில் சிலர், பணிகளை வேகமாக முடிப்பதற்காக, வாக்காளர்களின் சுய விவரங்களை மட்டும் ஆன்லைனில் பூர்த்தி செய்துவிட்டு, 2002 பட்டியல் விவரங்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்; அதேபோல், வாக்காளரின் தாய், தந்தை பெயரை முழுமையாக பதிவு செய்வதற்கு பதில், முதல் எழுத்தை மட்டும் பதிவு செய்துள்ளனர். அவிநாசி தொகுதியில், ஏராளமான வாக்காளரின், 2002 விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யாமல் விடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகள் மற்ற தொகுதிகளிலும் நடந்திருப்பதாக தெரியவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, அத்தகைய குளறுபடிகளை கண்டறிந்து, ஆன்லைன் பதிவுகளை சரி செய்யும் பணிகளிலும், பி.எல்.ஓ.,க்கள் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் கமிஷன் 14ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளதால், விடுபட்ட வாக்காளர்களிடமிருந்து படிவங்களை பெற்று பதிவு செய்வது மட்டுமின்றி, ஏற்கனவே பதிவு செய்த தரவுகளை சரிபார்த்து, திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், தேர்தல் பிரிவினர் நிம்மதி அடைந்துள்ளனர். அவிநாசி தொகுதியில், ஏராளமான வாக்காளர்களின், 2002 விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யாமல் விடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகள் மற்ற தொகுதிகளிலும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.