17 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
திருப்பூர் : அணைப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, ஜரூராக நடந்து வருகிறது.திருப்பூர் நகர சாலைகளில் நெரிசல் மற்றும் விபத்து நேரிடுவதை தவிர்க்க, மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்.,ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் மற்றும் ஊத்துக்குளி ரோடுகளை இணைக்கும் வகையில், 4.9 கி.மீ., சுற்றளவில், ரிங் ரோடு அமைக்கும் பணி கடந்த, 2006ல், துவங்கியது.இதில், மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில், அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டவும், தண்டவாளத்தின் குறுக்கே, ரயில்வே மேம்பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.கட்டுமானப்பணி மேற்கொள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருந்தது. நிலம் கையகப்படுத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கை எதிர்கொண்ட நெடுஞ்சாலைத்துறையினர் (பராமரிப்பு மற்றும் திட்டங்கள்) கடந்தாண்டு சாதகமான தீர்ப்பு பெற்றனர். இந்த வழக்கு காரணமாக, கட்டுமானப்பணி துவங்குவதில், 17 ஆண்டுகள் உருண்டோடியது.இதையடுத்து, திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு, கட்டுமானப்பணிகள் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது. தற்போது, மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என, அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது என, நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர்.