தெற்கு புறவழிச்சாலை பணிகள் துவக்கம்
பல்லடம்:பல்லடத்தில், தெற்கு புறவழிச் சாலை திட்டப் பணிகள் துவங்கியுள்ளன. பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு, ஏதாவது ஒரு வகையில் தீர்வு ஏற்படாதா என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக ஏக்கத்தில் உள்ளனர். கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட கரூர் -- கோவை பசுமைவழிச் சாலை; காளிவேலம்பட்டி பிரிவு - மாதப்பூர் புறவழிச்சாலை ஆகியவை கிடப்பில் உள்ளன. இதற்கிடையே, தமிழக அரசு, நெடுஞ்சாலை துறை மூலம், பல்லடத்தின் தெற்கு பகுதியில், புதிய புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. பல்லடம்,- செட்டிபாளையம் ரோடு, சின்னியகவுண்டம்பாளையம் அருகே துவங்கி, தாராபுரம் ரோடு, ஆலுாத்துப்பாளையம் பிரிவு வரை, 7.5 கி.மீ., துாரம் புறவழிச்சாலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது, ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, தற்போது, புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2026 மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன' என்றனர். --- பல்லடத்தில், தெற்கு புறவழிச்சாலை அமைக்கும் ஆரம்பகட்டப் பணிகள் துவங்கியுள்ளன. - தாராபுரம் ரோடு, ஆலுாத்துப்பாளையம் பிரிவில், நிலம் கையகப்பணி நடக்கிறது. பல்லடத்தில் நெரிசல் குறைய வாய்ப்பு பல்லடத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ள நிலையில், புதிதாக துவங்கியுள்ள இந்த தெற்கு புறவழிச்சாலை திட்டம், போக்குவரத்தில் நெரிசலுக்கு ஓரளவு தீர்வு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. திருச்சி ரோட்டில் இருந்து, கோவை செல்ல விரும்பும் கனரக வாகனங்கள், கன்டெய்னர்கள் உள்ளிட்டவை, பல்லடம் நகரப் பகுதிக்குள் நுழையாமல், தாராபுரம் ரோடு வழியாக சென்று, சித்தம்பலம், பொள்ளாச்சி ரோடு, பணிக்கம்பட்டி வழியாக செட்டிபாளையம் ரோட்டை அடைந்து, அங்கிருந்து, கோவை செல்ல முடியும் என்பதால், நகரப் பகுதிக்குள் போக்குவரத்து ஓரளவு கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது.