மறு தேர்வு எழுதுவோருக்கு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், மறு தேர்வு எழுதுவோருக்குஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,2 வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு இம்மாதம் நடக்க உள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு ஆப்சென்ட் ஆனவர்கள் மறு தேர்வு எழுதலாம்.மேலும் கல்வி இடைநிற்றலை தவிர்க்க, மாணவர்கள் கட்டாயம் மறு தேர்வு எழுதுவதற்கு பல்வேறு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.இதைத்தொடர்ந்து, உடுமலை சுற்றுப்பகுதி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் ஆப்சென்ட் ஆன அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர்.தேர்வுக்கு மாணவர்கள் பங்கேற்கவும், அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், மாணவர்கள் மறு தேர்வு எழுதுவதற்கு தேவையான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், இந்த பயிற்சியில் பங்கேற்காதவர்களை தொடர்பு கொண்டும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது' என்றனர்.