மதுக்கடையை நிரந்தரமாக அகற்ற எஸ்.ஆர்., நகர் மக்கள் மீண்டும் மனு
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்., நகர் பகுதியில், 950 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருகில், பல்வேறு புதிய குடியிருப்பு பகுதிகளும், தொழிற்சாலைகளும் உள்ளன. நொய்யல் கரையோரமாக ரோட்டரி பள்ளியும், மங்கலம் ரோட்டில் குமரன் கல்லுாரியில் உள்ளது.நொய்யல் கரையோரமாக அமைத்துள்ள புதிய தார்ரோட்டை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நொய்யல் ரோடு அருகில் மதுக்கடை (எண்:1925) அமைக்க முயற்சித்தனர். பொதுமக்கள் அறப்போராட்டம் நடத்தியதால், மதுக்கடை திறப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கடையை திறக்க வாய்ப்புள்ளதால், கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் நேற்று, கலெக்டரிடம் வலியுறுத்தினர்.எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனு:பொதுமக்கள் குடியிருப்பு, தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரிகள் உள்ள பகுதியில் மதுக்கடை அமைப்பதை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, போராட்டம் நடத்தி, மதுக்கடை திறப்பு தவிர்க்கப்பட்டது. தற்போது, மதுக்கடையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. எந்நேரத்திலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. கடந்த மாதம் 20ம் தேதி கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளோம். பொதுமக்களின் நலன்கருதி, மதுக்கடையை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.