உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆட்டுப்பட்டி முறைக்கு தெருநாய்கள் வேட்டு; விவசாய நிலம் வளமாவதில் சிக்கல்

ஆட்டுப்பட்டி முறைக்கு தெருநாய்கள் வேட்டு; விவசாய நிலம் வளமாவதில் சிக்கல்

திருப்பூர் : ''விவசாய நிலங்களை வளமாக்கும் 'ஆட்டுப்பட்டி' அமைக்கும் பழங்கால விவசாய முறைக்கே, தெருநாய்கள் வேட்டு வைத்துள்ளன'' என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.ஆடுகளின் சாணம், சிறுநீர் ஆகியவை சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இந்த உரம், விவசாய நிலங்களுக்கு இயற்கையாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், விளைநிலங்களில் ஆடுகளை அடைத்து வைத்து 'பட்டி' போடும் வழக்கம், விவசாயிகளிடம் உள்ளது.ஓரிடத்தில் அமைக்கப்படும் பட்டி, குறிப்பிட்ட சில நாள் இடைவெளியில் தோட்டத்தின் அடுத்த பகுதிக்கு நகர்த்தி வைக்கப்படும். இவ்வாறு, குறிப்பிட்ட நாள் இடைவெளியில், அனைத்து பகுதிகளுக்கும் ஆட்டுப்பட்டி நகர்த்தி வைக்கப்படும். இதனால், தோட்டம் முழுமைக்கும் ஆடுகளின் சாணம், சிறுநீர் மட்கி இயற்கை உரமாக மாறும். தோட்டத்தில் விளையும் பயிர் வளர்ச்சிக்கு அவை மிகுந்த பயனளிப்பதாக இருந்து வருகிறது.கிராமப்புறங்களில், இவ்வாறு பட்டியமைத்து, மாற்றும் நடைமுறை, இன்றும் இருந்து வருகிறது. இதில், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் பகுதியில், தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடிப்பதாலும், அதனால், ஆடுகள் இறப்பதாலும், பட்டி மாற்றும் நடைமுறையை விவசாயிகள் மாற்றியமைத்துள்ளனர்.---கம்பி வேலியால் வேயப்பட்ட, ஆட்டுப்பட்டிக்குள் தெருநாய்கள் புகாதவகையில் 'ஹாலோபிளாக்' கற்கள் அரணாக வைக்கப்பட்டுள்ளன.இடம்: வெள்ளகோவில், செங்காளிபாளையம்மூங்கில் வேயப்பட்ட ஆட்டுப்பட்டிக்குள், மண்ணை பறித்து தெருநாய்கள் புகுந்ததற்கான தடம் காணப்படுகிறது.இடம்: காங்கயம், சூலக்கல்புதுார்.

மண்ணைப் பறித்து... மூங்கிலை நகர்த்தி... பட்டிக்குள் நுழைந்து... நாய்கள் கொலவெறி

தோட்டத்தில் அமைக்கப்படும் ஆட்டுப்பட்டியை நகர்த்தி செல்வதற்கு வசதியாக, மூங்கில் உதவியுடன் பட்டி அமைக்கப்படும். ஆனால், தெரு நாய்கள் பட்டியின் அடிப்பகுதியில் மண்ணை பறித்து, மூங்கிலை நகர்த்தி, பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்து விடுகின்றன. எனவே, நகரும் பட்டிக்கு பதிலாக தோட்டங்களில் ஒரே இடத்தில் நிரந்தரமாக கம்பி வேலி உதவியுடன் பட்டி அமைக்கப்படுகிறது.வேலியின் அடிப்பகுதிக்குள் நாய்கள் புகாத வகையில் 'ஹாலோ பிளாக்' கற்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகின்றன. இதனால், நாய்கள் மண்ணை பறித்தாலும், 'ஹாலோபிளாக்' கற்களை தாண்டி, பட்டிக்குள் நுழைய முடியாது. இருப்பினும், இத்தகைய நகராத ஆட்டுப்பட்டி முறை என்பது, விவசாய நிலங்களை இயற்கை முறையில் பண்படுத்தும் நடைமுறைக்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது; இது, நல்லதும் அல்ல. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்தி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.- விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை