ஸ்கூல் பேக், எழுதுபொருட்கள் வாங்க பெற்றோருடன் குவிந்த மாணவர்கள்
திருப்பூர்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் வரும் 2 ம் தேதி திறக்கப்படவுள்ளது. புதிய வகுப்பு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. முழு ஆண்டு தேர்வு முடிந்து அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது.நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை பள்ளிகள் துவங்கியுள்ளன.புதிய கல்வியாண்டு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு புதிய பள்ளி, புதிய வகுப்பு, புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள் என புதியவற்றின் பட்டியல் நீளும். இதில், முக்கிய இடம் பிடிக்கும் வகையில் புதிய சீருடைகள், புதிய பாடப் புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டஉபகரணங்கள் உள்ளன.கோடை விடுமுறை நாளில் பெருமளவு தங்கள் நண்பர், உறவினர் வீடுகள், இன்பச் சுற்றுலா என பலவாறு கழித்த மாணவர்கள் பள்ளி திறப்புக்கு ஒரு வாரம் உள்ள நிலையில், பள்ளி அட்மிஷன், புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வகையில், பள்ளி மாணவர்கள் முதல் கட்டமாக கடைகளில் வாங்கும் பொருளில் முதலிடம் பெறும் புத்தகப் பைகள் விற்பனை தற்போது பரபரப்பாக நடக்கிறது.திருப்பூர் நகரில் உள்ள கடைகளில் தற்போது பல வகையான புத்தகப் பைகள் விற்பனைக்குவந்துள்ளன.துணியால் தயாரித்த பைகள், ரெக்சின் பைகள் என பல விதங்களில் இவை கடைகளில் விற்பனையாகிறது.மாணவர்களின் வகுப்புக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு ஏற்பவுமான அளவுகள் மற்றும் டிசைன்களில் பல வகை பைகள் தற்போது கடைகளில் விற்பனையாகிறது. மாணவர்கள் அவற்றை ஆவலுடன் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.மேலும், நோட் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள், லஞ்ச் பேக், டிபன் பாக்ஸ் போன்றவற்றின் விற்பனையும் கடைகளில் பரபரப்பாக காணப்படுகிறது.