பருத்தி சாகுபடிக்கு மானிய திட்டம்
உடுமலை; வரும் ஆடிப்பட்ட சீசனில், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வகையில், வேளாண்துறை வாயிலாக, மானியத்திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், முன்பு, பருத்தி சாகுபடி பிரதானமாக இருந்தது.இப்பகுதியில், 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, நீண்ட மற்றும் குறுகிய இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்பட்டது.பி.ஏ.பி., திட்டத்தில் பாசன நாட்கள் குறைப்பு, நிலையில்லாத விலை, நோய் தாக்குதல் ஆகிய காரணங்களால், 1997 ம் ஆண்டுக்கு பிறகு, ஆயிரம் ஏக்கராக சாகுபடி சரிந்தது.கடந்த சில ஆண்டுகளாக மீண்டும், மானாவாரியாகவும், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும் பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.விவசாயிகள் கூறுகையில், ' பல்வேறு காரணங்களால், கைவிடப்பட்ட பருத்தி சாகுபடியை, மீண்டும், மேற்கொள்ள ஆர்வமாக உள்ளோம். எனவே, தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விதைகளை மானியத்தில் வேளாண்துறை வாயிலாக வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். வரும் ஆடிப்பட்டத்தின் போது, திருமூர்த்தி அணையிலிருந்து, நான்காம் மண்டலத்துக்கு, தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதையொட்டி, மானியத்திட்டத்தை செயல்படுத்தினால், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது,'என்றனர்.தமிழக அரசும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.