உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோலார் நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு நாடா இல்லா தறி நெசவாளர்கள் நம்பிக்கை

சோலார் நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு நாடா இல்லா தறி நெசவாளர்கள் நம்பிக்கை

பல்லடம்: மின் நுகர்வோர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக, பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் கருணாகரன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.மனு அளித்த நாடா இல்லா தறி நெசவாளர் (சிஸ்வா) சங்கத்தினர் கூறியதாவது:மின் கட்டண சுமையை குறைக்கும் விதமாக, பெரும்பாலான ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு சோலார் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சோலார் நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படுகிறது.இதனை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, கடந்த ஆண்டு டிச., 22 அன்று சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகிறோம். வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.யாரெல்லாம் சோலார் பயன்படுத்துகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், கோரிக்கைக்கு ஏற்ப நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு அளிக்கலாம் என்றும் தமிழக அரசு நிதித்துறை, மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.இதை சுட்டிக்காட்டி, சோலார் நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு அளிக்காமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். மனுவை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், சோலார் பயன்படுத்தி வருபவர்களின் பட்டியலை கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

எட்டு மனுக்கள் மீதுஉடனடி நடவடிக்கை

முகாமில், பெறப்பட்ட, 55 மனுக்களில், 8 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.அவிநாசியில் 118 மனுக்கள்அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேற்று மின் நுகர்வோர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.திருப்பூர் மேற்பார்வையாளர் விஜய ஈஸ்வரன் (பொறுப்பு), செயற்பொறியாளர் சந்திரசேகரன் (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில், நான்கு ரத வீதிகளிலும் உள்ள மின்தடை, தாழ்வழுத்த மின் சப்ளை, தாலுகா அலுவலகம் முன் உள்ள மின் கம்பங்களின் இடையூறுகள், கைகாட்டிப்புதுார் பகுதியில் அவிநாசிலிங்கம்பாளையம் ரோட்டில் தெருவிளக்குகள் பொருத்துதல் ஆகிய குறைகளை மனுக்களாக பொதுமக்கள் அளித்தனர்.முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம், 118 மனுக்கள் பெறப்பட்டன. அதில் மூன்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ