வெங்காயத்துக்கான வரி ரத்து; ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு
பல்லடம்; வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டு வந்த வரி ரத்து செய்யப்பட்டதால், ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர்ஈஸ்வரன் கூறியதாவது:திருப்பூர், கோவை மாவட்ட பகுதிகளில், சின்ன வெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதன் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இதன் காரணமாகவே, விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் வகையில், வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த, 20 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.வெங்காயத்துக்கு விலை கிடைக்காமல் உள்ள விவசாயிகளுக்கு இதன் மூலம், ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள், வெங்காய உற்பத்தியை மேலும் ஆர்வத்துடன் மேற்கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.