உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெளிநாடு செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி

வெளிநாடு செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி

திருப்பூர்: வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால், விண்ணப்பிக்கும் விதிகளில் மாற்றங்களை கல்வித்துறை இயக்குனரகம் செய்துள்ளது. இதனால், இனி, மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை இல்லாமல், நேரடியாக முதன்மை கல்வி அலுவலர் மூலம் இணை இயக்குனருக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தங்களின் மருத்துவ சிகிச்சை, மகளின் பிரசவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் போது, துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு பெறுவதில் காலதாமதம் நேரிட்டு வந்தது. இது குறித்து தொடர்ந்து புகார்களும் எழுந்து வந்தன. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனரகம், வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரையை பின்பற்ற வேண்டும் என்ற விதி மாற்றப் படுகிறது. இனி, பள்ளியின் துறைத்தலைவர் அல்லது தலைமை ஆசிரியர் வாயிலாக முதன்மை கல்வி அலுவலருக்கு விவரங்களை அனுப்பலாம். அதனை உடனே பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனருக்கு அனுப்பி அனுமதி பெறலாம்; போலீசாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டிய அவசியமும் இல்லை. இது குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெளிநாடு செல்வோர் விண்ணப்பிக்கும் விதிகளில் தளர்வு குறித்து கல்வித்துறை இயக்கக வழங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக ஆசிரியர், பிற பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ