வீட்டுமனை அங்கீகாரத்துக்கு லஞ்சம் தொழில்நுட்ப உதவியாளர் கைது
திருப்பூர்:திருப்பூரில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க, 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக தொழில்நுட்ப உதவியாளரை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், சித்தம்பலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55. இவருக்கு சொந்தமான, 5.5 சென்ட் இடம், திருப்பூர் - மங்கலம் ரோட்டில் உள்ள ஜான் ஜோதி கார்டனில் உள்ளது. இந்த மனைக்கு, டி.டி.சி.பி., அங்கீகாரம் வாங்க விண்ணப்பம் செய்திருந்தார். இதற்காக, ராயபுரத்தில் இயங்கும் நகர் ஊரமைப்பு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கம், 38, என்பவரை அணுகினார். அவர், 6 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில் நேற்று மதியம் ராயபுரம் அலுவலகத்தில் லஞ்ச பணத்தை கொடுத்த போது, மறைந்து இருந்த டி.எஸ்.பி., ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான போலீசார், நாகலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.