உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நிமிடங்கள் பத்து... காட்சிகள் முத்து

 நிமிடங்கள் பத்து... காட்சிகள் முத்து

தி ருப்பூர் மாவட்டம், குண்டடம் - ஊதியூர் அடுத்துள்ள தாயம்பாளையம், வி.எம்.சி.டி.வி., மேல்நிலைப்பள்ளி. மாநில கலைத்திருவிழாவில், அரசு உதவி பெறும் பள்ளிகள் பிரிவில் இப்பள்ளி பங்கேற்றது. இப்பள்ளி பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த, மூன்று மாணவியர், ஐந்து மாணவர் உட்பட எட்டு பேர் அடங்கிய குழுவினர், மரப்பாவை (கையுறை பாவை) பிரிவில், மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தினர். மாவட்டத்தில், 12 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், இப்பள்ளியை சேர்ந்த சிபிராஜா, கே.சஞ்சய், நரேந்திரபிரசாத், சஞ்சய், கவுதம், யாழினி, பாரதி, தமயந்தி ஆகிய எட்டு பேர் கொண்ட குழுவினர் பரிசுகளை குழு பிரிவில் தட்டி துாக்கியுள்ளனர். 'பசுமையும், பாரம்பரியமும்' எனும் தலைப்பில், உருவான மரப்பொம்மை நாடகம், நடனம் ஆகியன பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர செய்தது. வீரம், விவேகம், தைரியம், அன்பு, அரவணைப்பு என அனைத்தையும் வேலு நாச்சியார், அவ்வையார், கண்ணகி, முத்துலட்சுமி அம்மையார் வழியில் காட்சிப்படுத்தியது சிறப்பு. பாரம்பரிய சிறுதானிய உணவு, சித்த மருத்துவம், நாட்டுப்புற கலை, ஏறு தழுவுதல், ஈட்டிஎறிதல், வாள் சண்டை வரலாறு என அனைத்தையும், பத்தே நிமிடத்தில் பறைசாற்றியதில் பார்வையாளர்களுக்கு வியப்பு. குழுவின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய, ஆசிரியர் தமிழருவி, ஓவிய ஆசிரியர் ரவி ஆகியோர் கூறுகையில், 'பசுமைக்கு விவசாயத்தையும், பாரம்பரியத்துக்கு நம் கலைகளையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டோம். இரவு- பகலாக, பொம்மையை உருவாக்கினோம். மரப்பொம்மை, ஆடை தேர்வு செய்வதில் கவனமாக இருந்தோம். நாங்கள் கற்றுத்தந்ததை முழுமையாக புரிந்து கொண்ட மாணவ, மாணவியரின் விரல் ஜலத்தால், பொம்மைகள் கதாபாத்திரங்களாக உருவகமாகின. ஒரு மாத தொடர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதில் மகிழ்ச்சியே,' என்றனர். திருப்பூர், பாளையக்காடு, மு.ந.முருகப்ப செட்டியார் பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி ஜெயமித்ரா, மாநில கலைத்திருவிழாவில், தனிநபர் நடிப்பு பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். கரடிவாவி, எஸ்.எல்.என்.எம். மெட்ரிக் பள்ளி, பிளஸ் 1 மாணவர் கலையரசன் பலகுரல் பேச்சு பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். பொங்கலுார், பி.வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவர் ருத்ரமூர்த்தி பாவனை நடிப்பில் மாநிலத்தில் முதலிடம்.மாநில போட்டிக்கு, திருப்பூரில், 446 பேர் சென்றனர். இவர்களில், 37 பேர் முதல் மூன்று இடங்களுக்குள் பெற்றனர். முதலிடத்தை, 13 பேர் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ