கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள்; கலெக்டரிடம் பட்டியல் வழங்கிய விசைத்தறியாளர்கள்
திருப்பூர் : திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் செய்யப்படும் துணி உற்பத்திக்கு மீட்டர் அடிப்படையில் உற்பத்திக் கூலி வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உரிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பின், ஒருவழியாக சோமனுார் பகுதி ரகங்களுக்கு, 15 சதவீதம், பிற பகுதி ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முடிவானது.இதனை சோமனுார் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கினாலும், பிற பகுதிகளில் கூலி உயர்வு இது வரை வழங்கப்படவில்லை. விசைத்தறியாளர் தரப்பில் நடத்தப்பட்ட போராட்டங்களும், அரசு தரப்பில் நடத்திய பேச்சு வார்த்தைகளும், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதியும் இது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் போராட்ட களம் இறங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதாக விசைத்தறியாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் இது குறித்து கோரிக்கை மனுவுடன் நேற்று திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரேவை சந்தித்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களின் பட்டியலை வழங்கினர். அதே போல் கோவையில் எம்.பி., கணபதி ராஜ்குமாரிடமும் கோரிக்கை மனு, கூலி உயர்வு வழங்காமல் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பெயர்ப் பட்டியலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சங்க தலைவர் பூபதி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், நடராஜ், சம்பத் (அவிநாசி). பொன்னுசாமி, ஆறுமுகம் (தெக்கலுார்) மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.