உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் கடைகளுக்கு ஏலம் இப்போது இல்லை:கவுன்சிலர்கள் எதிர்ப்பால் திடீர் முடிவு

பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் கடைகளுக்கு ஏலம் இப்போது இல்லை:கவுன்சிலர்கள் எதிர்ப்பால் திடீர் முடிவு

திருப்பூர்;மாநகராட்சி மன்ற கூட்டத்தில், பஸ் ஸ்டாண்ட் கடைகள், தினசரி மார்க்கெட் கடைகள் ஏலம் உள்ளிட்ட சில தீர்மானங்கள் கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் நேற்று, 211 தீர்மானங்கள் கவுன்சில் அனுமதிக்காக கொண்டு வரப்பட்டது. இதில், தீர்மானம் எண்: 214ல், கோவில்வழி புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டியுள்ள வணிக வளாக கடைகள் ஏலம் குறித்த தீர்மானம் வந்தது. கவுன்சிலர் கோமதி (தி.மு.க.,) பேசுகையில் , 'ஏலதாரர்கள் பஸ் ஸ்டாண்டுக்கு அனைத்து பகுதி பஸ்களும் வர வேண்டும். தற்போதைய நிலையில், ஏல தொகை அளவுக்கு வாடகை செலுத்த முடியாது என்று தெரிவிக்கின்றனர். இந்த ஏல தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்' என்றார். இதுகுறித்து நீண்ட நேரம் விவாதம் நடந்தது. பொதுப்பணித்துறையின் பரிந்துரைப்படி சதுரடிக்கு, 58 ரூபாய் என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயித்து ஏலம் விட்டு, மறு ஏலம் நடத்தி வாடகை நிர்ணயிக்கப்பட்டது குறித்து விளக்கப்பட்டது. பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்திய நிலையில், தீர்மானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தினசரி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மாநகராட்சி தினசரி மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள உட்புறக் கடைகள், சதுர அடிக்கு, 113 ரூபாய் என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து, 30 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு ஒட்டுமொத்த குத்தகை என்ற அடிப்படையில் ஏலம் விட தீர்மானம் எண்:374 கொண்டு வரப்பட்டது. மேலும், தீர்மானம் எண்: 375ன் படி, இவ்வளாகம் முன், 16 கடைகள் தலா 7 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு தனித்தனி கடைகள் ஏலம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இடத்தில் 2 மற்றும் 3 தலைமுறையாக வியாபாரிகள் கடை வைத்திருந்தனர். கட்டுமானப் பணியின் போது, மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தபடி அவர்களுக்கு கடைகள் வழங்க வேண்டும் என்று இத்தீர்மானம் குறித்து மேயர் விளக்கினார். தொடர்ந்து நடந்த விவாத முடிவில், இந்த தீர்மானமும் ஒத்தி வைக்கப்பட்டது. மனைப்பிரிவு அங்கீகாரம் வீரபாண்டியில், 4.5 ஏக்கர் பரப்பில் வீட்டுமனையிடம் அமைத்து அதற்கான அங்கீகாரம் வழங்க ஒரு தீர்மானம் வந்தது. இந்திய கம்யூ., கவுன்சிலர் அருணாசலம், அந்த மனைப்பிரிவுக்கு வடிகால் டிஸ்போஸபிள் பாயின்ட் இல்லை என்று குறிப்பிட்டார். அதிகாரிகள் மறு ஆய்வு நடத்துவதற்காக அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதவிர ஆழ்குழாய் மோட்டார் பராமரிப்பு பணிக்கு விலைப்புள்ளியை விட, 10 சதவீதம் குறைவாக குறிப்பிட்ட டெண்டர் மீதான தீர்மானம் இந்திய கம்யூ., கவுன்சிலர் ரவிச்சந்திரன் கோரிக்கையால் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ