இன்னும் அப்டேட் ஆகாத மாநகராட்சி இணைய தளம்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியின் அதிகார பூர்வ இணைய தளம் அப்டேட் கூட செய்யப்படாமல் உள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கான இணைய தளம் துவங்கப்பட்டு அதன் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சி குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் இந்த இணையதளத்தில் மாநகராட்சியின் அண்மை விவரங்கள் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது.கடந்த மாதம் கமிஷனரமாக இருந்த ராமமூர்த்தி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்று ஒரு மாதமாகியும் இன்னும் மாநகராட்சி இணைய தளத்தில், கமிஷனர் என்று அவரது பெயரும் போட்டோவும் இடம் பெற்றுள்ளது.இந்த விவரங்கள் அப்டேட் செய்து, இணைய தளத்தில் உரிய மாற்றம் செய்யப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி குறித்த விவரங்களை ஆன்லைனில் இணைய தளத்தில் தேடுவோர் இது போன்ற தவறான தகவல்களை காண நேரிடுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக, சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றும் அமித் நியமிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் கமிஷனராக இங்கு வந்து பதவியேற்ற பின்னராவது, மாநகராட்சி இணையதளம் அப்டேட் செய்யப்படுமா?