பல்லடம்: மாநகராட்சி குப்பை கொட்டும் விவகாரம் தொடர்பாக, ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடக்கவுள்ள நிலையில், உரிய தீர்வு கிடைக்கும் என, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சின்னக்காளிபாளையம் கிராமத்தில் உள்ள, 7 ஏக்கர் நிலத்தில் ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு, இடுவாய், 63 வேலம்பாளையம், கரைப்புதுார் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம், நான்கு ஊராட்சி பொதுமக்களும் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் ஆகியனவும் நடத்தப்பட்டன. இதற்கிடையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக, விவசாயிகள், பொதுமக்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடக்க உள்ளது. இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள தேர்வு செய்துள்ள, 7 ஏக்கர் நிலம், இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள், சமூக நலன் கருதி வழங்கப்பட்ட இடம். ஆனால், இந்த இடத்தை முறைகேடாக பெயர் மாற்றம் செய்து, விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் நிறைந்த இடுவாய் கிராமத்தில், குப்பை கிடங்கு அமைத்தே தீருவோம் என, மாநகராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது. முறைகேடாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நியாயப்படுத்தும் விதமாக, சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி மனுதாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிராக, பி.ஏ.பி. பாசன விவசாயிகள், குடியிருப்போர் நல சங்கம், விவசாயிகள் சங்கம் என, மூன்று தரப்பு சார்பில், எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் மட்டுமன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும் கோர்ட்டில் சுட்டிக்காட்ட உள்ளோம். மாநகராட்சி நிர்வாகம், தவறுகள் அனைத்தையும் மறைத்து, கோர்ட்டில் முறையிட்டுள்ளது. இது தொடர்பாக, இன்று நடக்கும் வழக்கு விசாரணையில், விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, உரிய தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.