| ADDED : செப் 22, 2024 05:43 AM
திருப்பூர் : மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட 36 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய தம்பதிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.திருப்பூர், எஸ்.வி., காலனியைச் சேர்ந்த பாபு - கார்த்திகா தம்பதி. இவர்கள் சோலார் பேனல் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.மாநகராட்சி, 20வது வார்டு, எஸ்.வி., காலனி, ராமசாமி - மாணிக்கம்மாள் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்படுகிறது.இப்பணி, 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பாபு - கார்த்திகா தம்பதியினர் தங்கள் பங்களிப்பாக, 36 லட்சம் ரூபாய் வழங்கினர். இதற்கான காசோலையை நேற்று மேயர் தினேஷ்குமாரிடம் அவர்கள் வழங்கினர். 2வது மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இந்த நிதியை வழங்கிய பாபுவின் தாத்தா ராமசாமி - மாணிக்கம்மாள் தம்பதியினர், ஏற்கனவே இப்பள்ளிக்கு, 20 சென்ட் நிலமும், ஐந்து வகுப்பறை கட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, தொடர்ந்து கல்வி சேவையாற்றி வரும் பாபுவின் குடும்பத்தை அனைவரும் பாராட்டினர்.