திறந்தவெளி பாறைக்குழியால் காத்திருக்கும் ஆபத்து
பல்லடம்: திறந்தவெளி பாறைக்குழிகளால் ஆபத்து காத்திருக்கும் நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.பல்லடத்தில், கோடங்கிபாளையம், வேலம்பாளையம், பூமலுார், இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான கல்குவாரிகள் மற்றும் கிரஷர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுடன், பயன்பாடற்ற பாறைக்குழிகளும் பல இடங்களில் உள்ளன. உரிமம் புதுப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட கல்குவாரிகள், நாளடைவில் பாறைக்குழிகளாக மாறுகின்றன. மழைக்காலங்களின் போது இவ்வாறான பாறைக்குழிகளில், மழைநீர் தேங்குகின்றன. பொதுவாக பாறைக்குழிகளின் நிலப்பரப்பு சரி சமமாக இருக்காது. இதன் காரணமாக, மழைநீர் தேங்கும் போது இவற்றின் ஆழம் என்ன என்பதை அறிய இயலாது. இச்சூழலில், பாறைக்குழிகளில் தேங்கும் மழை நீரில், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். சிறுவர்களும் இவற்றில் குளிக்கும்போது ஆழம் தெரியாமல் சிக்கிக்கொள்கின்றனர்.கடந்த காலங்களில், பாறைக்குழிகளில் குளிக்கச் சென்று, ஆழமான பகுதிகளிலும், பாறை இடுக்கிலும் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம். இத்துயர சம்பவங்களின் போது மட்டும், இது ஒரு பேச்சுப் பொருளாகிறது. தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் இதை மறந்து விடுகின்றனர்.பல்லடம் வட்டாரப் பகுதியில், இது போன்ற பயன்பாடற்ற பாறைக்குழிகள் ஏராளமாக உள்ளன.பாறைக்குழிகளால் ஆபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்க, பாறைக்குழிகளை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டன.ஆனால், இன்றுவரை இவை செயல் வடிவம் பெறவில்லை. மாறாக, எண்ணற்ற பாறைக்குழிகள் இன்றும் திறந்த வெளியில் தான் உள்ளன. பருவமழை துவங்க உள்ள நிலையில், திறந்தவெளி பாறைக்குழிகளால் ஆபத்துகள் அதிகம் உள்ளன. எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.