உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழக ஜவுளித்துறை வளர்ச்சி காட்சிப்படுத்துதல் முக்கியம்

தமிழக ஜவுளித்துறை வளர்ச்சி காட்சிப்படுத்துதல் முக்கியம்

திருப்பூர்; புதுடில்லியில், 14ம் தேதி துவங்கிய 'பாரத் டெக்ஸ் -2025' சர்வதேச ஜவுளி கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் பார்வையிட்டு வருகின்றனர்.'திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா)' தலைவர் ஸ்ரீகாந்த், செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என, 10 பேர், கண்காட்சியை பார்வையிட்டனர். 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில், குஜராத், மத்திய பிரதேசம் உட்பட, பல்வேறு மாநிலங்கள், தங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, கண்காட்சி அமைத்திருந்தன. நம் நாட்டில், இவ்வளவு வகையான உற்பத்தி நடப்பது, வியப்பாக இருக்கிறது.கண்காட்சி, புதிய தொழில் துவங்க வழிகாட்டுவதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது. திருப்பூரில் மட்டும் 'டிசைன்' செய்கிறோம் என்று நினைக்கிறோம்; குஜராத், ம.பி., மாநிலத்தவர், அவர்களது பாரம்பரியப்படி வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.தொழில்நுட்ப ஜவுளி, பசுமை சார் உற்பத்தி போன்ற புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்தாண்டு நடந்த கண்காட்சியை காட்டிலும், ரஷ்யா, லத்தீன் அமெரிக்கா உட்பட, ஏராளமான வெளிநாட்டு வர்த்தகர்கள் விசாரணை நடத்தி வருவதாக, கண்காட்சி அமைப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதாவது, வர்த்தகர்கள் வருகை அதிகரித்துள்ளது.திருப்பூரில் ஒசைரி ஆடைகளை மட்டும் பார்க்கிறோம்; பல்வேறு மாநிலங்கள் உற்பத்தி செய்யும் பல்வகை ஆடைகளை, கண்காட்சியில் காண முடிந்தது. வரும் காலத்தில், தமிழக அரசும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை மூலம், நமது ஜவுளித்துறை வளர்ச்சியை, இத்தகைய சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்த திட்டமிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி