உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுக்கே வந்த நாய்; தடம்புரண்ட வாழ்க்கை: பெற்றோரை பறிகொடுத்து சிறுவர்கள் நிர்க்கதி

குறுக்கே வந்த நாய்; தடம்புரண்ட வாழ்க்கை: பெற்றோரை பறிகொடுத்து சிறுவர்கள் நிர்க்கதி

திருப்பூர் : கண்ணீர் ததும்ப பேசுகிறார் செல்வாள், 68. நாய் குறுக்கே புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில், தனது மகனும், மருமகளும் பலியான சோகத்தில் இருந்து விடுபட முடியாத செல்வாள், தற்போது, பேரன்களைப் பார்க்க வேண்டிய பொறுப்பையும் ஏற்க வேண்டியிருக்கிறது.திருப்பூர் அடுத்த கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மணி, 48; பனியன் தொழிலாளி. இவரது மனைவி கவிதா, 43. மரக்கடை ஊழியர். கடந்த மாதம் 25ம் தேதி, டூவீலரில் மனைவியுடன் மணி சென்றபோது, கோவில்வழி அருகே, நாய் குறுக்கே புகுந்தது. டூவீலர் கவிழ்ந்து, சாலையில் விழுந்த இவர்கள் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், இவர்கள் பரிதாபமாக இறந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு, தம்பதி பலியான அதே இடத்தில் தான், 'டூ வீலர்' விபத்தில் இவர்களின் மூத்த மகன் கமலேஷ் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. ''கடுமையாக போராடி, அந்த சோகத்தை மறந்த நிலையில், பெற்றோரும் பின்தொடர்ந்து சென்றுவிட்டனர்'' என்று மணியின் தாய் செல்வாள் கண்ணீர் ததும்ப கூறுகிறார்.''இரண்டாவது பேரன், ஸ்ரீராம், 19 தனியார் கல்லுாரியில், 'பி.காம்., -சி.ஏ.,' முதலாம் ஆண்டு படிக்கிறான். அவனுக்கு, காது பாதிப்பு இருக்கிறது; ஏற்கனவே, சிறுநீரகம் மற்றும் இருதய பாதிப்பும் இருக்கிறது; நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறான். மூன்றாவது பேரன், ஆகாஷ், பொல்லிக்காளிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான்.நான் இருக்கும் வரை, பேரன்களை கவனித்துக்கொள்வேன்; எனக்கு பிறகு, யார் கவனிப்பார்கள் என்ற கவலையே என்னையும் நிலைகுலைய செய்கிறது'' என்று கூறியபடி, செல்வாள் கதறியழுகிறார்.செல்வாளும், கவிதாவின் தாயும் தான், தம்பதியர் விட்டுச்சென்ற மகன்களுக்கு ஆதரவு. ''சிறிய வீடு இருக்கிறது. கடன் வாங்கி எனது மகன் ஆசையாக வீடு கட்டினான். தற்போது கடனை கட்ட ஆளில்லை.பேரன்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். கேள்விப்படுபவர்கள் எல்லோரும் நேரில் வந்து ஆறுதல் கூறி செல்கின்றனர்.என்னாலும் நடமாட முடிவதில்லை. குழந்தைகள் எதிர்காலத்துக்கு அரசுதான் உதவிட வேண்டும்...'' என்று கரம் கூப்புகிறார் செல்வாள்.வாயில்லா ஜீவன், தானறியாமல் செய்தாலும் கூட, ஒரு குடும்பத்தின் ஆணி வேரை ஆட்டிவைத்துவிட்டது. இதேபோல், மாணவ, மாணவியர், பெண்கள், ஆண்கள் என, பல்வேறு கனவுகளுடன் 'டூவீலர்'களில் பயணித்த எத்தனையோ பேருக்கு, இதுபோன்ற தெருநாய்கள் எமனாக வாய்த்துவிடுகின்றன. இது, நாயின் குற்றமல்ல என்றாலும், இதுபோன்ற உயிர்பலிக்கு யார் தான் பொறுப்பு? தெருநாய்ப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தெரு நாய் பிரச்னை தீர்வு என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ