பயர் சர்வீஸ் ரோடு பழுதானது; சீரமைப்பு பணி எப்போது?
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் ரோட்டில், டைமண்ட் தியேட்டர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள ரோடு ஜம்மனை ஓடையை ஒட்டிச் செல்கிறது. இந்த ரோட்டில், பனியன் தொழிற்சாலைகள், குடியிருப்புகள், திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த ரோட்டில் குழாய் பதிப்பு பணிக்கு கடந்த சில மாதம் முன் தோண்டப்பட்டது. குழாய் பதிப்பு பணி முடிந்த பின், தோண்டிய குழியின் மேற்பகுதியில் மண்ணைக் கொட்டி மூடிச் சென்று விட்டனர். வாகனங்கள் சென்று வந்த நிலையில், ரோடு பெரிய அளவிலான குழியாக மாறி விட்டது. ரோட்டின் மையப்பகுதியில் ஏற்பட்ட குழி காரணமாக வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறிகீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயமும், வாகனங்கள் பழுதடையும் நிலையும் காணப்படுகிறது. எனவே, ரோட்டை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.