வார்டுக்கு நிதி ரூ.10 லட்சம் தானா...
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் மீது மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசியதாவது:பத்மநாபன் (4வது மண்டல தலைவர்): தற்போது 4.10 கோடி ரூபாய்க்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது வரவேற்க கூடியது. அனைத்து தரப்பினருக்கும், அனைத்து பகுதிக்குமான திட்டங்களை கொண்டதாக உள்ளது. மூன்று நாள் இடைவெளியில் குடிநீர் சப்ளை என்ற திட்டம் 90 சதவீதம் நிைவேறியுள்ளது.தார் ரோடு மற்றும் கான்கிரீட் ரோடுகள் அமைப்பது மக்கள் பிரச்னைகளுக்கு பெரும் தீர்வாக அமையும். கவுன்சிலர் அலுவலகம் பொதுநிதியில் கட்ட வேண்டும். வார்டு நிதியாக 10 லட்சம் ரூபாயாவது வழங்க வேண்டும். யானைப் பசிக்கு சோளப்பொறி போல் உள்ளது. வார்டு வளர்ச்சி நிதியாக 25 லட்சம் ஒதுக்கியது வரவேற்பதாக உள்ளது.கோவிந்தசாமி (3வது மண்டல தலைவர்): சிறந்த பணிகள் தேர்வு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான பட்ஜெட்டாக உள்ளது. இது வரை அடிப்படை வசதிகள் குறித்து மட்டுமே பேசி வந்தோம். பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் நகரின் தேவைகளுக்கு மருத்துவமனை, பூங்கா உள்ளிட்ட பல திட்டங்கள் வந்துள்ளது.நகரின் வளர்ச்சி மற்றும் தேவைகளை உணர்ந்து ஏற்படுத்திய திட்டங்கள். இவற்றை இந்த பதவிக்காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். மண்டலங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.கோவிந்தராஜ் (2வது மண்டல தலைவர்): திடக்கழிவு மேலாண்மையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். மருத்துவமனை, பள்ளிகள், பூங்காக்கள், சாலைகள் போன்ற மக்கள் தேவைகளை அறிந்து தயாரித்த பட்ெஜட். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்.ராதாகிருஷ்ணன்(தி.மு.க.,): தமிழக அளவில் 25 மாநகராட்சிகளில் உபரி பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை திருப்பூர் மாநகராட்சி மட்டுமே பெற்றுள்ளது. தமிழகத்தை நிதி வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.லோகநாயகி (தி.மு.க.,): வார்டு வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு, தேவைகளைப் பட்டியலிட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தெரு நாய் கட்டுப்படுத்துதல், நிழற்குடை அமைத்தல் போன்ற திட்டங்கள் வரவேற்க கூடியது.ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): நகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தேவைகளை அறிந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கவுன்சிலர் அலுவலகம் கட்ட பொது நிதியில் நிதி ஒதுக்க வேண்டும். மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இலவச கேபிள் இணைப்பு திட்டம் கொண்டு வர வேண்டும்.துாய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சமூக விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வார்டு தோறும் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்கள் கால வரையறை நிர்ணயித்து விரைந்து முடிக்க வேண்டும்.மணிமேகலை (மா.கம்யூ.,): உபரி பட்ஜெட் என்பதால் வரவேற்க கூடியதாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் 97 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி பகுதியில் எப்போது இத்திட்டம் வரும் எனத் தெரிவிக்க வேண்டும்.பல்லடம் ரோடு மழை நீர் வடிகால் கட்டுவது எப்போது. பள்ளிகளில் துாய்மைப் பணியாளருக்கு ஊதியம் உயர்த்த வேண்டும். நெகிழி இல்லாத திருப்பூர் என்பதே சாத்தியமில்லாத நிலை உள்ளது.