தடுப்பணையில் அதிகரிக்கும் ஆகாய தாமரை மக்களுக்கு தொடர் பாதிப்பு
உடுமலை,; அமராவதி ஆற்றின் தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வேகமாக பரவி வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, நீரோட்டத்தை சீராக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து துவங்கும், அமராவதி ஆற்றின் கரையில், நுாற்றுக்கணக்கான கிராமங்கள் அமைந்துள்ளன. வழியோர கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, அமராவதி ஆற்றுக்குச்செல்வது வழக்கமாகும்.இந்நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் படித்துறைகள் மற்றும் ஆற்றின் கரையோரம் மற்றும் மேடான பகுதிகளில், ஆகாயத்தாமரையின் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக, கல்லாபுரம், ருத்ராபாளையம், கொழுமம், மடத்துக்குளம், கணியூர்உள்ளிட்ட இடங்களில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள், ஆற்றங்கரைக்கு சென்று வருகின்றனர்.இப்போது அப்பகுதி முழுவதும், ஆகாயத்தாமரை மட்டுமல்லாது, கரைகளில் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.இதனால், ஆற்றின் இயல்பான நீரோட்டம் தடைபடுகிறது; மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு இருக்கும் போது நீரோட்டம் திசைமாறி, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.மேலும், அமராவதி ஆற்றில் பரவலாக காணப்படும், நன்னீர் முதலைகள், இத்தகைய மேடான, புதர் மண்டிய பகுதிகளில், தங்குவது அதிகரித்துள்ளது. நடமாடும் இடங்களில், தென்படும் முதலைகளால், மக்கள் அச்சப்படுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக ஆற்றின் மேடான பகுதிகளிலும், குறைந்தளவு நீர் தேங்கும் இடங்களிலும், தடுப்பணைகளிலும் ஆகாயத்தாமரை செடிகளை, பொதுப்பணித்துறையினர் மற்றும் அருகிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக அகற்ற வேண்டும்.பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆகாயத்தாமரை செடிகள் ஆற்று நீரில் பரவுவது ஆபத்தானது என, இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இச்செடிகளை அகற்றினால், ஆற்றில் நீரோட்டம் தடைபடாமல் செல்லும். மக்களும், விவசாயிகளும் அச்சமின்றி, ஆற்றங்கரையை பயன்படுத்த முடியும். ஆற்று நீர் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, முக்கிய நீராதாரமான அமராவதி ஆற்றை காப்பாற்ற வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.