கண்டு கொள்ளாத தெரு நாய் விவகாரம்! தொடரும் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
திருப்பூர்; இறைச்சி வாடையை பழகியதால் தான் தெரு நாய்கள், ஆடு, கோழிகளை விரட்டி கடிக்கின்றன; உள்ளாட்சி நிர் வாகங்கள் உரிய கள ஆய்வு மேற்கொண்டு, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என,மக்கள் விரும்புகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் தெரு நாய்கள் தொல்லை என்பது அதிகரித்து வருகிறது. வீதி, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள், வீதியில் நடந்து செல்வோர், நடை பயிற்சி செய்வோர் மற்றும் டூவீலரில் செல்வோரை விரட்டுகின்றன; கடிக்கவும் செய்கின்றன. வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், விவசாய நிலங்களுக்குள் புகும் நாய்கள், பட்டிகளில் கட்டப்பட்டுள்ள ஆடுகளை தாக்கி, காயப்படுத்துகின்றன.நாய்களின் கொடூர தாக்குதலின் அதிர்ச்சியில் ஆடுகள் இறக்கவும் செய்கின்றன. நேற்று முன்தினம் கூட, காங்கயம், சிவன்மலை பஞ்சாயத்து, ராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான, 5 செம்மறியாடுகளை நாய்கள் கடித்து குதறின; இதில் ஆடுகள் பலியாகின.விவசாயிகள் கூறியதாவது:நகரம் மற்றும் கிராமங்களை ஒட்டிய நகர வீதி, தெருக்களில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. சாலையோரங்களில் மாலை நேரங்களில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்து விட்டன. சில்லி சிக்கன், மீன், சூப் என, பலவகை அசைவ தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. அந்த கடைகளை சுற்றி நிற்கும் நாய்கள், அசைவ உணவுகளின் கழிவுகள், எலும்புத்துண்டுகளை உண்டு பழகிவிட்டன.இறைச்சிக் கடைக்காரர்கள் பொதுவெளியில் துாக்கி வீசும், இறைச்சிக் கழிவுகளையும் உண்டு பழகிவிட்டன. இதனால், நாய்களின் குணம் மாறி, ஆடு, கோழிகளை மூர்க்கத்தனமாக விரட்டி, கடிக்கின்றன; இதில், அவை இறக்கின் றன. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்; தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கந நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வறு, அவர்கள் கூறினர்.