தன்னம்பிக்கை சிறகு முளைத்த தருணம்!
இது, வள்ளுவப் பெருந்தகையின் அதிஅற்புதம் நிறைந்த குறள். இதன் சிறப்பு எதுவெனில், 1,330 குறள்களில், இந்த ஒரு குறளில் மட்டுமே துணையெழுத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கற்ற கல்வியின்படி, அதுவும் ஒழுக்க நெறி கொண்டு பயணிக்க வேண்டும். கற்ற கல்வி மட்டுமே எவரின் துணையுமின்றி வெற்றி பெறும் வகையில், வள்ளுவன் கூறியது எவ்வளவு உண்மை.துணையெழுத்து இன்றி ஒரு குறளை படைத்து, அவ்வழியே நடக்க வேண்டும் என்பதை மதிநுணுக்கத்துடன் கூறிய திருவள்ளுவரின் கூற்றுப்படி, எவரின் துணையுமின்றி, பலரும் வெற்றி பெற்றுள்ளனர். அப்படி ஒருவர், குரு, 54. தன்னம்பிக்கை நெறி தவழ, தரணியில் வீறுநடை நடக்கும் அவர், தனக்கு நேர்ந்ததையும், அதில் வெற்றி பெற்றதையும் மகிழ்வுடன், கூறியது என்ன...திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தின் அருகேயுள்ள ஒரு சித்த மருந்து கடையில் பணிபுரிகிறேன். ஏழு ஆண்டுக்கு முன், சர்க்கரை பிணி என்னை வருத்தியதில், நடக்கும் இடது அவயத்தை இழந்தேன். ஓ... இனி, இந்த பூமியில் வசிப்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையில், தளர்ந்தேன். நம்பிக்கை இழந்தேன்.இருப்பினும், இவ்வுலகில் வசிப்பதின் அவசியம் குறித்த ஒரு புரிதல், 'சக்ஷம்' அமைப்பு வழியே வந்தது. கூடவே, வசந்தமும் வீசியது. எனக்கு செயற்கை அவயம் வழங்கி, எனது வலிகளை ஏற்று என்னை 'நடக்க' வைத்தனர். அதன்பின், தன்னம்பிக்கை வந்தது. ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இருப்பினும், வேகத்துடன் பணி செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே, சித்த மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறேன். சக்ஷம் அமைப்பு மீண்டும் ஒரு பிறப்பை தந்தது என்றே என எண்ணுகிறேன்.எனக்கு நேர்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, உரிய கருத்துகளை வழங்கி வருகிறேன். எந்தெந்த வகையில் உதவி, எங்கு கிடைக்கும், எப்படி அணுக வேண்டும், அரசுத்துறையின் பலன் என்ன என்ற விவரங்களை அவர்களுக்கு கூறி, மிகவும் திருப்தியுடன் இருக்கிறேன்.நேற்று எங்களுக்கு சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்பட்டது. எத்தனை ஆயிரம் பேர் பிறவியிலும், இடைப்பட்ட தினங்களிலும் உடல் உறுப்புகளை இழந்து, பயத்துடன் இனி எப்படி என்றெண்ணி, இருண்ட உலகத்தில் அச்சத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு புதிய பிறப்பை அளிக்க 'சக் ஷம்' அமைப்பு உறுதியுடன் உள்ளது. இதுதவிர, அரசுத்துறையினரும் முன் வரவேண்டும். அதன்பின்னர், அவர்களும் நல்ல நிலைமை அடைவர் என்பது உறுதி...!என்று கூறிய குருவின் மன உறுதி மற்றவர்களுக்கு ஒரு சிறப்பு மிக்க உளவியல் கருத்து என்பது மிகையல்ல.