உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மார்கழி மாதம் பிறந்தது; பக்தி மணம் கமழ்கிறது

மார்கழி மாதம் பிறந்தது; பக்தி மணம் கமழ்கிறது

திருப்பூர்; மார்கழி மாதம் துவங்கியதையடுத்து, நேற்று கோவில்களில் திருவெம்பாவை, திருப்பாவை பாராயணம் செய்து, சிறப்பு வழிபாடு, பஜனையுடன், பக்தி மணம் கமழும் வழிபாடு துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், மார்கழி முதல் நாளாகிய நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் வழிபாட்டில் பங்கேற்றனர். திருப்பூர் அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம் சார்பில், 71ம் ஆண்டு மார்கழி மாத சிறப்புபாராய வழிபாடு நேற்று துவங்கியது. குலாலர் பிள்ளையார் கோவிலில் திருப்பள்ளியெழுச்சியும், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவெம்பாவையும், கன்னிகா பரமேஸ்வரி கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் திருப்பாவையும் பாராயணம் செய்யப்பட்டது. இசைக்கருவிகளுடன் வந்த அருள்நெறி வார வழிபாட்டு குழுவினர், பண்ணிசையுடன் பதிகங்களை பாராயணம் செய்தனர். தேவாரம், திருவாசக பதிகங்களை பாடினர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சிவனடியார்கள் இன்னிசை வாசித்தபடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வழிபட்டனர். வரும் ஜன., 4 முதல், ஸ்ரீமாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் துவங்க உள்ளது. தினமும், மாணிக்கவாசகர் பாடிய, திருவெம்பாவை பதிகங்களை, கனகசபை நடராஜர் சன்னதி முன் பாடி, மாணிக்கவாசகர் வழிபாடு நடத்தப்படும். வரும், 12ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 13ம் தேதி நடராஜர் - சிவகாமியம்மன் அபிேஷக பூஜை, காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவும், 11ம் தேதி கூடாரவல்லி உற்சவமும் நடைபெற உள்ளது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சிவனடியார்கள் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை, 5:00 மணிக்கு நான்கு ரத வீதிகளில், சிவபுராணம், திருவெம்பாவை பாராயணம் செய்து அவிநாசியப்பரை வழிபடுகின்றனர்.---மார்கழி மாதம் நேற்று பிறந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருவெம்பாவை பாடல்களைப் பாடியபடி வலம் வந்த சிவனடியார்கள்.திருப்பூர் குலாலர் பிள்ளையார் கோவிலில் இருந்து பாராயணம் பாடியபடி ஊர்வலமாக வந்த அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டத்தினர்.

திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்

'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பகவான். சிவபெருமான் மீது திருவெம்பாவையும், பெருமாள் மீது திருப்பாவையும் பாராயணம் செய்து, நற்கதி அடையும் மாதமாகவும், ஆருத்ரா மஹா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீமத் ஹனுமன் ஜெயந்தி என பல்வேறு புண்ணிய நாட்கள் ஒருங்கிணைந்து வரும் மாதமாகவும் மார்கழி விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை