புத்தாக்கத்துக்கான புதிய தேடல் டெக்ஸத்தான் - 3.0
திருப்பூர் : மத்திய அரசின், 'நிதி ஆயோக்' மற்றும் 'அடல் இன்குபேஷன்' மைய வழிகாட்டுதலுடன், 'நிப்ட்-டீ அடல் இன்குபேஷன்' மையம், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில் இயங்கி வருகிறது. புத்தாக்க தொழில்களை ஊக்குவிக்கும் இம்மையம், இதுவரை, 100க்கும் அதிகமான 'ஸ்டார்ட் அப்'களை தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவு செய்துள்ளது.மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. 'புதுமைக்கு புது பார்வை' என்ற கோஷத்துடன், 'டெக்ஸத்தான் -3.0' என்ற,புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் நிகழ்ச்சி, 18 மற்றும் 19ம் தேதிகளில், 'நிப்ட்-டீ அடல் இன்குபேஷன்' மையத்தில் நடந்தது.இரண்டு மாதங்கள் முன்னதாக, அறிவிப்பு செய்து, புதிய தொழில்நுட்ப அணுகலை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. 'ஆன்லைன்' வாயிலாக, 98 புத்தாக்க தொழில்நுட்பங்கள் குறித்து விண்ணப்பம் செய்ததில், தொழில்நுட்ப நிபுணர்கள் குழு வாயிலாக, 37 தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. தொழில்முனைவோர் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.தேர்வான நபர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். முதல் நாளில், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் வணிக மேம்பாட்டுக்காக, 'மென்டரிங்' செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாவது நாளில், 'பிட்சிங்' நிகழ்வு நடந்தது.தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழக பிரதிநிதி சிவக்குமார், 'ஆதித்யா பிர்லா கிராஸிம்' நிர்வாகி நித்யானந்தம், 'ரிலையன்ஸ்' பிரதிநிதி அரவிந்தன் ஆகியோர் நடுவராக செயல்பட்டனர். நிகழ்வில், சிறப்பான தொழில்நுட்ப பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் ஆறு இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிறைவு விழாவில், 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மைய தலைமை செயல்பாட்டு அலுவலர் அருள்செல்வன் வரவேற்றார். புதிய தொழில்நுட்ப பகிர்வுகள் குறித்து பலரும் பேசினர். 'டெக்ஸ்டைல் கமிட்டி'யின் துணை இயக்குனர் கவுரிசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொழில்நுட்ப ஜவுளி மற்றும் 'ஏஐ' தொழில்நுட்பம் குறித்து பேசினார்.தலைமை நிர்வாக அலுவலர் செந்தில்குமார், 'இன்குபேஷன்' மைய செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விளக்கினார். 'நிப்ட்-டீ' ஆராய்ச்சி குழு தலைவர் செந்தில்குமார், 'இன்குபேஷன்' மையம், புதிய தொழில் முனைவோருக்கு வழங்கும் உதவி மற்றும் நிதி ஆதரவு குறித்து விளக்கினார்.புதிய தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள், 'நிப்ட- டீ' அடல் இன்குபேஷன்' மையத்தை அணுகி, ஆலோசனை பெறலாம். இந்தியாவின் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மற்றும் டெக்ஸ்டைல் ஆட்டோமேஷன் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் தளமாக, 'டெக்ஸத்தான் - 3.0' மாறியுள்ளது