உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும்

ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும்

அவிநாசி; அவிநாசி நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, தாசில்தார் சந்திரசேகர் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் தனலட்சுமி, கமிஷனர் வெங்கடேஸ்வரன், டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, முருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, கலெக்டருக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து, அதனை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள உரிய அனுமதி பெற நடவடிக்கைகள் எடுப்பது. சாலையோர கடைகளை முறைப்படுத்த குழு அமைத்து தகுதியான நபர்களை கடைகள் அமைக்க நகராட்சி வாயிலாக அனுமதி அளிப்பது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்வது, பல்வேறுபணிகளுக்காக சூளை முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் தோண்டப்பட்டுள்ள குழிகளை சரி செய்து ரோட்டை விரிவாக்கம் செய்வது, தாலுகா அலுவலகம் துவங்கி எம்.எல்.ஏ., அலுவலகம் வரை உள்ள தள்ளுவண்டி மற்றும் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அவிநாசி அனைத்து வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., - மா.கம்யூ., வி.சி.க., - த.வி.க., ஆகிய கட்சியின் பிரதிநிதிகளும், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை, களம், குளம் காக்கும் இயக்கம் ஆகிய சமூக நல அமைப்புகளின் பிரதிநிகளும் பங்கேற்றனர். கூட்டம் குறித்து, நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: கலெக்டர் உத்தரவிட்ட பின், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சூளை வரை உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இதற்கான கால அவகாசத்தினை நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி வாயிலாக அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து, குறிப்பிட்ட தேதிக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகள் அகற்றி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தாலுகா அலுவலகம் முன்பு உள்ள கம்பி வேலி அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை