உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறந்தவெளியே ஓய்வறை ரயில் பயணியர் பரிதாபம்

திறந்தவெளியே ஓய்வறை ரயில் பயணியர் பரிதாபம்

திருப்பூர்; ' ரயில்வே ஸ்டேஷனில் போதிய ஓய்வறை இல்லாததால், ரயில் பயணியர் சாலையோரத்திலும், வழித்தடங்களிலும் காத்திருக்கவும், உறங்கவும் நேர்கிறது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில் உள்ள ஓய்வறை, ஸ்டேஷன் உருவான, 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதிகபட்சமாக, ஒரே நேரத்தில், 15 பேர் மட்டுமே தங்க முடியும்.இருக்கைகள் போடப்பட்டிருப்பதால், பத்து பேர் மட்டுமே அமர்ந்திருக்கும் இடவசதியுடன் உள்ளது. இரண்டாவது பிளாட்பார்மில் ஏ.சி., ஓய்வறை, சாதாரண ஓய்வறை இரண்டும் சேர்த்து, 50 பேர் பயன்படுத்தும் வகையில் உள்ளது.நாட்டின் பின்னலாடை தலைநகராக திகழ்வதால், தினந்தோறும், 1,500 வடமாநிலத்தினரும், வார இறுதி நாட்களில், 2,000 பேரும் பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் திருப்பூர் வந்திறங்குகின்றனர்; இங்கிருந்து தினசரி, 500 - 750 பேர் ரயிலில் பயணிக்கின்றனர்.

பயணிகளுக்கு சங்கடம்

தற்போது, முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில் 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், விரிவாக்க பணி நடந்து வருவதால், பயணிகளுக்கு இடையூறு அதிகமாக உள்ளது. குறிப்பாக, பிளாட்பார்ம் குறுகலாக உள்ளதால், ரயில் விட்டு இறங்குவோர் அங்கு நிற்க முடியவில்லை. உடனடியாக வெளியேற வேண்டிய நிலை உள்ளது.

மாற்று ஏற்பாடு இல்லை

இதனால், ரயில் வருவதற்கு இரண்டு மணி நேரம் முன் வந்து காத்திருப்பவர்கள், நள்ளிரவு, அதிகாலையில் ரயில் விட்டு இறங்குவோர் முதல் பிளாட்பார்ம்மை விட்டு வெளியேறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.தற்காலிக மாற்று ஏற்பாடு செய்யாததால், எங்கும் நிற்க வழியின்றி, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, ஆர்.எம்.எஸ்., அலுவலகம் முன்புற வழியில் அமர்ந்து கொள்கின்றனர்; சிலர் அசதியில் அங்கேயே உறங்குகின்றனர்.வேகமாக ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழையும் வாகனங்களால் ஏதேனும் ஆபத்து நேரிடும் அபாயம் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு தற்காலிகமாக ஓய்வறை வசதி ஏற்படுத்த வேண்டும்.'அம்ருத் பாரத்' பணியில் முதல் பணியாக ஓய்வறையை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி