கிணற்றில் குதித்தவர் பலி காப்பாற்ற முயன்றவர் மாயம்
அவிநாசி:கிணற்றில் குதித்தவர் பலியான நிலையில், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 37; மனைவியிடம் விவாகரத்து பெற்று, தாய் பாக்கியவதியுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த நவீன்குமார், பை-பாஸ் ரோட்டில் இருந்து வாடகை காரில் வீட்டுக்கு சென்றார். கார் டிரைவரின் மொபைல் போனை வாங்கி, பாக்கியவதிக்கு தொடர்பு கொண்டு காருக்கு வாடகை தர பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்து விட்டர். ஆத்திரமடைந்த நவீன்குமார், வீட்டுக்கு அருகிலுள்ள 160 அடி ஆழ கிணற்றில் குதித்தார். அவரது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பிரவீன்ராஜ், 37, என்பவர், கிணற்றில் குதித்து நவீன்குமாரை காப்பாற்ற முயன்றார். ஆனால், இருவரும் கிணற்றில் மூழ்கினர். அவிநாசி தீயணைப்பு வீரர்கள் நேற்று நவீன்குமாரின் சடலத்தை மீட்டு, பிரவீன்ராஜை தேடி வருகின்றனர்.