உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டிளங்காளைகளின்... கம்பத்தாட்டம்!

கட்டிளங்காளைகளின்... கம்பத்தாட்டம்!

உழைக்கும் வர்க்கத்தினரின் உழைப்பின் அலுப்பு போக்கும் அருமருந்தாக பாடல்களும், நடனங்களும் இருந்தன. குறிப்பாக, விவசாய தொழிலில், விதைப்பு துவங்கி, அறுவடை வரையிலான பணியில் ஈடுபடும் ஆண், பெண்கள் பாடல் பாடியும், நடனமாடியும் தங்களின் உடலுக்கு தெம்பூட்டி, மனசை இலகுவாக்கிக் கொண்டனர். 'இது, தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம்' என்று சொல்வதிலும் மிகையில்லை.அப்படிப்பட்ட ஒரு கலைதான் கம்பத்து ஆட்டம். அக்காலத்தில் அறுவடை முடிந்து, களைப்பாறும் வேளையில், இந்த நடனம் தான், விவசாயிகளுக்கு இளைப்பாறுதலாக இருந்திருக்கிறது.ஆனால், நாகரிக வளர்ச்சியில், கம்பத்துக்கலை மறந்து போனது; இருப்பினும், அக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினர், அவிநாசி துலுக்கமுத்துார் பகுதியில் வசிக்கும் சவுந்தர் என்ற இளைஞரும், அவரது நண்பர்கள் சிலரும்.கோவில் விழாக்களில் கம்பத்து நடனமாட துவங்கினர். இது, பலரையும் ஈர்க்க, அந்த நடனத்தை கற்றுக்கொள்ள இளைஞர், இளம் பெண்கள் பலரும் ஆர்வம் காட்டினர். அதன் விளைவு, தற்போது, 400க்கும் மேற்பட்டோர் இக்கலையை கற்று, 'தீரன் கலைக்குழு' என்ற பெயரில், பல்வேறு அணிகளாக, ஆங்காங்கே நடக்கும் கோவில் விழாக்களில் கம்பத்து ஆட்டத்தை அரங்கேற்றி, அசத்தி வருகின்றனர்.ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை சட்டை, கால்களில் சலங்கை, தலையில் துண்டு... இதுதான், இந்த கலையை அரங்கேற்றும் இளைஞர்களின் உடை. தாளத்துக்கு ஏற்ப உடல் அசைவுகளை வெளிக்காட்டும் இந்த நடனம், கிராமங்களில் உள்ள கோவிலில் விழாக்களில், தற்போது சிறப்பு சேர்த்து வருகிறது.அவிநாசியில் அச்சாரமிடப்பட்ட இக்கலை அன்னுார், கோவில்பாளையம், பெருந்துறை, காங்கயம் என, கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவி வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளில், 100 நிகழ்ச்சிகளை நடத்தி சதம் அடித்திருக்கின்றனர், கம்பத்து ஆட்டக்குழுவினர்.தங்களின் சாதனை குறித்து, தீரன் கலைக்குழு நிறுவனர் சவுந்தர் கூறியதாவது:கம்பத்து கலையை வளர்க்கும் நோக்கில் வெறும், 5 பேருடன் நடனமாட துவங்கினோம். தற்போது, 15 வயதில் இருந்து, 30 வயதுக்குட்பட்டோரில், 400க்கும் மேற்பட்டவர்கள் இக்கலையை, மேடைகளில் அரங்கேற்றுகின்றனர். காலில் அதிக எடை கொண்ட சலங்கை கட்டி ஆடும் பெருஞ்சலங்கையாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஒப்பிடுகையில், அதிக வேகமெடுத்து ஆடக்கூடிய ஆட்டம், கம்பத்து ஆட்டம்தான்.கோவில் விழா, பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மட்டுமே இக்கலையை அரங்கேற்றி வருகிறோம். வேறெந்த தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றுவதில்லை. நாங்கள், 150வது நிகழ்ச்சியை நடத்தும் போது, தமிழக அரசின் ஊக்குவிப்புடன், பிரமாண்டமாக அரங்கேற்ற திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ