உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பொது அறிவில் சிறகடிக்க செய்த பட்டம் இதழ்; விறுவிறுப்பு குறையாத வினாடி - வினா

 பொது அறிவில் சிறகடிக்க செய்த பட்டம் இதழ்; விறுவிறுப்பு குறையாத வினாடி - வினா

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், அவிநாசி, ராக்கியாபாளையம் திருப்பூர் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அறிவாற்றலில் அசத்தினர். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என பாடம் சார்ந்த கல்வியுடன், போட்டி நிறைந்த உலகில், சிந்தனையாற்றல், பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் அவசியமாக மாறியிருக்கிறது. மாணவர்களின் பொது அறிவு திறனை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' சார்பில் வெளியிடப்படும் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர்; தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, 'கிப்ட் ஸ்பார்ன்ஸர்'களான சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள் சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்படும். திருப்பூர் அளவில் நடந்து வரும் போட்டியின் தொடர்ச்சியாக அவிநாசி, ராக்கியா பாளையம், திருப்பூர் பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் தகுதிச்சுற்று வினாடி வினா நடந்தது; 86 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். விறுவிறுப்பு குறையாமல் நடந்த போட்டியில் 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சுஜின், ரக்ஷித் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று சிறப்பு பரிசு வென்றனர். பள்ளி முதல்வர் யமுனா, போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ