மழை நீடிக்கும் வெயில் தணியும்
திருப்பூர்: தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் கோவை வேளாண் ஆராய்ச்சி நிலைய, வானிலைத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுரை: திருப்பூரில், அதிகபட்சம், 29 முதல், 32 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சம், 20 முதல், 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தென்படும். வரும் நாட்களில், வெப்பநிலை, 4 முதல், 5 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது. காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 70 முதல், 80 சதவீதம் பதிவாக வாய்ப்புள்ளது.மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மிதமான மழையுடன் மணிக்கு, 4-10 கி.மீ., வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண் ஈரத்தை பொறுத்து, நீர்ப்பாசனத்தை ஒத்தி வைக்க வேண்டும். அவ்வப்போது கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில், தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.மழை எதிர்பார்க்கப்படுவதால், பயிர் மேலாண்மை நடவடிக்கைகளை மழையில்லாத நாட்களில் செய்யலாம். பருவ மழைக்கால விதைப்பை தொடரலாம். மானாவாரியில் பருத்தி, பருப்பு வகைகளை விதைக்கலாம் அதிகளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், பண்ணைக்குட்டைகளில் மழைநீரை சேமிக்கலாம். தென்னை மரங்களை சுற்றி வட்டப்பாத்தி அமைப்பதன் வாயிலாக, மழைநீரை சேமிக்க முடியும்.கோழி மற்றும் மாட்டு கொட்டைகளின் அருகில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், தீவனம் நனையாமல் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும். புதிதாக முளைத்த புற்களை கால்நடைகளுக்கு கொடுக்கவோ, அங்கு மேய்ச்சலுக்கு விடவோ கூடாது.இவ்வாறு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.