குறி வச்சு அடி... வெற்றி வரும் படி!
ரா மகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர், திருப்பூர்: மக்கள் தொகையில் நம் நாடு, உலகளவில் இரண்டாமிடம் பெற்றிருந்தாலும், தடகளம் மற்றும் குழு விளையாட்டுகளில் பின்தங்கியே உள்ளது. தமிழகம், நல்லதொரு தட்வெட்ப நிலையில், உடல் திறனை மேம்படுத்தும் சீதோஷ்ண நிலையில் இருக்கிறது. எனவே, உடற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். நம் மாநிலத்தில், 25:1 என்ற எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது விதி; ஆனால், 50:1 என்ற அளவில் தான் ஆசிரியர்கள் உள்ளனர். பணி ஓய்வு பெறுவோருக்கு மாற்றாக, புதிய ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படுவதில்லை. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. எனவே, உடற்கல்வி பாடத்தை ஆறாவது பாடமாக கட்டாயமாக்கி, உடற்கல்வி பாடநுால்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.குழந்தை பருவத்திலேயே உடல் பருமன், நோய் எதிர்பாற்றல் குறைவு, போதை பொருள் பழக்கம், மொபைல் போன் அடிமைத்தனம் போன்வற்றில் இருந்து மாணவர்களை கண்காணித்து வெளிக்கொணர, அனைத்து அரசுப்பள்ளியிலும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். தங்க மங்கையாக 75 வயதிலும்...! தடகளத்தில் தட்டெறிதல், குண்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் விளையாட்டில் திறமை பெற்றவராக, வாலிபால் பயிற்றுனராக, திருப்பூர் பழனியம்மாள் பள்ளியில், 33 ஆண்டு உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி, 17 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்ற கண்ணம்மாள், தற்போது, 75 வயதை தொட்டுள்ளார். இருப்பினும், மூத்தோர் தடகளத்தில், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று அசத்தி வருகிறார். வரும், நவ., மாதம் சென்னையில் நடக்கும் ஆசிய போட்டியில் பங்கேற்க இருக்கிறார். அவர் கூறுகையில், ''நான், 6ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே தடகள விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். அந்த உற்சாகம் மற்றும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இனியும் குறையவில்லை. இந்த வயதிலும் ஈரோடு, சேலம், ஒசூர், திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மாவட்ட போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்று வருகிறேன். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினர், தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; வயதை ஒரு தடையே கருதக்கூடாது'' என்றார்.