ஸ்ரீசத்ய சாய் பக்தர்களின் ஆத்மார்த்த சேவை அகண்ட நாம பஜனை... ரத்த தானம்... ஏழைகளுக்கு நல உதவி
திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருப்பூரில் நேற்று மகிளா யுவதிகளின் அகண்ட நாம பஜனை நடந்தது; இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினர்.ஸ்ரீசத்ய சாய்பாபாவின், 99வது பிறந்த நாள் விழா, திருப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 19 முதல், 23ம் தேதி வரை, சிறப்பு நகர சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 19ம் தேதி மகிளா தினமாக கொண்டாடப்பட்டது.கடந்த, 20ம் தேதி திருவிளக்கு பூஜை; 21ம் தேதி இளைஞர் தினம்; 22ம் தேதி நாராயண சேவை நடந்தது. நேற்று முன்தினம், காலை முதல், இரவு வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.பி.என்., ரோடு ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில் நேற்று காலை, 9:00 மணிக்கு, மகிளா யுவதிகளின், 99 அகண்ட நாம பஜனையும், 9:30 மணிக்கு சாய் இளைஞர்கள் நடத்திய ரத்ததான முகாமும் நடந்தது. முகாமில், 42 யூனிட் ரத்தம், தானமாக பெற்று, அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது. சாயி சேவா அமைப்புகள் சார்பில், ஏழைகளுக்கு நல உதவி வழங்கப்பட்டது. நல்லுாரில் நடந்த நிகழ்ச்சியில், ஆண்களுக்கு வேட்டி, சட்டையும், பெண்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது.