உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோயை விலை கொடுத்து வாங்கும் அவலம்

நோயை விலை கொடுத்து வாங்கும் அவலம்

உடுமலை நகரில், பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில், நுாற்றுக்கணக்கான தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இங்கு, உணவு பொருட்களில், தடைசெய்யப்பட்ட நிறமிகளை பயன்படுத்தி, பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், பஸ் ஸ்டாண்டில் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ள பகுதியில், தள்ளுவண்டி கடைகளிலும், சந்தை ரோடு, தாலுகா அலுவலகம் பகுதியில், கிழங்கு விற்பனை கடைகளில், தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால், மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே, பொள்ளாச்சி ரோட்டிலுள்ள ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளில், சுகாதாரமற்ற முறையில், உணவு பாதுகாப்பு துறையால் தடை செய்யபட்ட நிறமிகளை பயன்படுத்தியும், பல நாட்கள் இருப்பு வைத்தும் உணவு பொருட்கள் விற்கின்றனர். மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, சுற்றுலா மையங்களான அமராவதி அணை, திருமூர்த்திமலை பகுதிகளிலும், உணவு பொருட்கள் விற்பனையும் 'சுகாதாரம் என்ன விலை' என்று கேட்கும் நிலை உள்ளது. பழக்கடைகளில் ஜூஸ் உற்பத்திக்கு அழுகிய பழங்கள் பயன்படுத்தப்படுகிறது. தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற இறைச்சி உணவு வகைகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அபராதம் விதிப்பு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: உடுமலை நகரம் மற்றும் மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, தள்ளுவண்டி கடைகள், ேஹாட்டல்கள், பேக்கரிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. உணவு உற்பத்தி கூடங்களில் சுகாதாரம் பேணவும், ரசாயனம் கலந்த நிறமிகள், கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் தரம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த, 8 மாதங்களில், உடுமலை நகரம், புற நகர் பகுதிகள், மடத்துக்குளம் பகுதியில், ஆய்வு செய்யப்பட்டு, 140 கடைகளுக்கு, மொத்தம், 65 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி