அறங்காவலர் புதிய குழு அமைகிறது
திருப்பூர், : தமிழக அரசின், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களை நிர்வாகம் செய்ய, அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. பரம்பரை அறங்காவலர் இல்லாத கோவில்களுக்கு, இரண்டு ஆண்டுகள் செயல்படும் வகையில், அறங்காவலர் நியமனம் நடந்து வருகிறது.அறங்காவலர் நியமன பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, மாவட்ட அளவிலான, அறங்காவலர் குழு முதலில் உருவாக்கப்படுகிறது. துறை சார்பில் நேரடியாக நியமனம் செய்து, அவர்களில் ஒருவர் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகிறார். இக்குழு, ஒவ்வொரு கோவிலுக்கும் அறிவிப்பு செய்து, விண்ணப்பங்களை பரிசீலித்து, அறங்காவலர்களை தேர்வு செய்கிறது.தனிநபர் அறங்காவலர் மற்றும் மூன்று அறங்காவலர் உள்ள கோவில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு நேரடியாக பரிந்துரை செய்து, அறங்காவலர்களை நியமிக்கிறது. ஐந்து அறங்காவலர் இருக்கும் கோவில்களுக்கு, மூவரை இக்குழு பரிந்துரை செய்கிறது; அறநிலையத்துறை கமிஷனர் மேலும் இரண்டு அறங்காவலரை நியமனம் செய்கிறார்.திருப்பூர் மாவட்டத்தில், 1100க்கும் அதிகமான கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தது. இதுவரை, 60 சதவீத கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடந்து முடிந்துள்ளது.மாவட்ட அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, புதிய குழுவை நியமிக்கும் பணிகளை, அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, அறிவிப்பு செய்து, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பங்களை பரிசீலித்து, பரிந்துரை செய்யப்படும் தகுதியான நபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் குழு தலைவராக தேர்வு செய்யப் படுவார். அதற்கு பிறகு, கோவில் அறங்காவலர் நியமன பணி தொடர்ந்து நடக்கும்,' என்றனர்.