உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வலி அகற்றும் வழி; மயக்கவியலின் மகத்துவம்

வலி அகற்றும் வழி; மயக்கவியலின் மகத்துவம்

'ஈ தர்' என்னும் முதல் மயக்க மருந்தை நினைவுகூரும் வகையில், அக்., 16ஐ, உலக மயக்கவியல் நாளாக, ஐ.நா., அறிவித்தது. மயக்கவியல் நாளான இன்று இதுதொடர்பாக, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி, மயக்கவியல் உதவிப்பேராசிரியர், டாக்டர் பவித்ரா நம்மிடம் பகிர்ந்தவை: அறுவை சிகிச்சை செய்யும் இடத்தைப் பொறுத்து, மயக்கவியலில் பல வகைகள் உள்ளன. முழு மற்றும் பகுதி மயக்கவியல் இரண்டும் அதிகமாகப் பின்பற்றப்படுகின்றன. தலை, கழுத்து, மார்பு போன்ற இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய, முழு மயக்கமருந்து கொடுக்கப்படும். பிற பகுதிகளுக்கு வயிற்றுக்கு கீழ் கால் மட்டும் மரத்துப்போகும்படி செய்வர். எலும்பு உடைந்து கடும் வலியில் இருப்பர்; அவர்களை, மருத்துவரால் தொடக்கூட முடியாது. மயக்க மருந்து கொடுப்பதால் மட்டுமே சிகிச்சை அளிப்பது எளிமையாகிறது. குறிப்பிட்ட நரம்பை மட்டும் மரத்துப்போக வைப்பது, கை, கால், கழுத்து அறுவை சிகிச்சைக்குப் பயன்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தெரியாதபடி குறைந்தது 4 முதல் 12 மணி நேரம் வரையும் மரத்துப்போக வைக்கலாம். கைகொடுக்கும்தொழில்நுட்பம் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் வாயிலாக, குறிப்பிட்ட நரம்பை கண்டறிந்து அதை மட்டும் மரத்துப்போக வைக்கலாம். முழு மயக்கத்தில் இருதய, சிறுநீரக, ரத்த அழுத்தம் நோயாளிகள், போன்றோருக்கு ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற பிரச்னைகள் வராதபடி கவனமாக கொடுக்க வேண்டும். இந்த இயந்திரத்தால் அத்தகைய பணி தேவைப்படாது. குறிப்பிட்ட இடத்தை மட்டும் நரம்பு வழியாக மரத்துப்போக செய்வதால் பிற பாகங்கள் எப்பொழுதும் போல சீராக செயல்படும். வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு வழியாக நோயாளிகளின் ஒவ்வொரு அசைவுகளை, சீரான இயக்கத்தை கணக்கிட இயலும். அதன் மூலம் எளிதாக, துல்லியமாக கணக்கிடலாம். பிழைக்கச்செய்யும் முதலுதவி அறுவை சிகிச்சை தாண்டி விபத்து சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு (ஐ.சி.யு.,) போன்ற பிற இடங்களிலும் மயக்கவியல் துறை பங்காற்றுகிறது. அடிபட்டு வலியில் துடிப்போருக்கு முதலில் கையாள்வதே மயக்கவியல் துறைதான். சரியான மயக்க மருந்து கொடுத்த பிறகே மருத்துவரால் மருத்துவம் பார்க்க முடியும். மயக்கமளித்தல், ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்கல், மூச்சு சரிபார்த்தல், சுய நினைவளித்தல் போன்ற முதல் உதவிகளை நாங்கள் தான் செய்வோம். ஒருவரை பிழைக்க வைப்பதில், முதல் உதவியை செய்து முக்கியப்பங்காற்றுவது மயக்கவியல் நிபுணர்களே. இவ்வாறு அவர் கூறினார். - இன்று (அக். 16), உலக மயக்கவியல் தினம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி