உணர்வை சரியாக வெளிப்படுத்த தெரிந்தவரே வெற்றியாளர்
திருப்பூர்; திருப்பூர் நகைச்சுவை முற்றம் அறக்கட்டளை சார்பில், மாதாந்திர சிறப்பு விழா நேற்று நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முரளி வரவேற்றார். மண்டப நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.மதுரை பேராசிரியர் முத்துலட்சுமி, இன்ப சுற்றுலா என்ற தலைப்பில் பேசியதாவது: உலகின் முதல் சுற்றுலா பயணி இறைவன்தான். பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் இந்த பூவுலகத்துக்கு மனிதனை சுற்றுலா அனுப்பி வைத்தான். அந்த நோக்கம் வேறாக இருந்தது. மனிதன் உலகில் உள்ள விஷயங்களை அறிந்து மீண்டும் தன் இடம் வந்து சேர வேண்டும் என்பது தான் அது. இந்த உலகில் மனிதன் அனுபவிக்கும் இன்பம், துன்பம் எல்லாமே இறைவன் நமக்கு தரும் பாடம்.மனிதன் அந்த நோக்கத்திலிருந்து மாறி விட்டான். இந்த இயற்கையை அழிவின்றி அனுபவிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆறாவது அறிவும், ஏழாவது சுவையும் என்ற தலைப்பில் கவிஞர் அருள் பிரகாஷ் பேசியதாவது:மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகளில் நகைச்சுவைக்கு மட்டும் தான் சுவை என்பதை சேர்த்துள்ளனர். அதன் மூலம் இதன் சிறப்பை நாம் உணரலாம். ஒரு மனிதனுக்கு மூளை, மனம், உடல் மூன்றும் சரியாக இயங்க வேண்டும். அப்போதுதான் அவன் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்.நம் சிந்தனை, எண்ணம் அனைத்தும் நேர் கோட்டில் இருக்க வேண்டும்.நமது உணர்வுகளை, எங்கு, எப்போது, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு மனிதன் வெற்றி பெற்றவனாக கருத முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.